ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லாலு பிரசாத் அன்புக் கட்டளையிட்டார்.

15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தின் போது லாலு பிரசாத் யாதவ் தனது வழக்கமான பாணியில் பேசினார்.

அதானி விவகாரத்தில் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும், மோடி மற்றும் பாஜக-வை குறிவைத்து தாக்கினார்.

இந்து-முஸ்லிம் என்ற கோஷத்தை முன்வைத்து, ஹனுமான் ஜியின் பெயரைக் கூறிக்கொண்டு தேர்தலில் இறங்குகிறது பாஜக. கர்நாடகாவில், ஹனுமானை வைத்து அரசியல் செய்யப்பார்த்தார்கள். ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அனுமனின் அனுகிரகமும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே பாஜக இயங்கிக் கொண்டிருக்கிறது. 2000 நோட்டு ஏன் தடை செய்யப்பட்டது என்று இன்றுவரை தெரியவில்லை என்று லாலு பிரசாத் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, “ராகுல் காந்தி இப்போது திருமணம் செய்து கொள்ளவேண்டும். உங்கள் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

ஏன் இன்னும் தாடியுடன் சுற்றுகிறீர்கள் காலம் கடந்துவிட வில்லை உங்கள் வயது எங்கே போனது ? தாடியை மழித்துவிட்டு வாருங்கள் உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்களும் வருகிறோம்” என்று ராகுல் காந்திக்கு அன்புக் கட்டளையிட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு லாலு பிரசாத் நகைச்சுவையாக பேசியதைக் கேட்டு நிதிஷ் குமார், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மகிழ்ச்சியில் சிரித்தனர்.

முன்னதாக ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் மாநில காங்கிரஸ் அலுவலகமான சதகத் ஆசிரமத்துக்கு ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வந்தார்.

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெற உள்ளது.