டில்லி

பீகார் முன்னாள் முதல்வர் லாலு, அவர் மனைவி மற்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு மோசடி வழக்கில் ஜாமீன் வ்ழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2004 முதல் 2009 வரை பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ரயில்வே அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்., ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிகக் குறைந்த விலையில் லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையொட்டி வழக்குப்பதிவு செய்த சிபிஐயும் அமலாக்கத்துறையும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நிலத்தை லஞ்சமாகப் பெற்று 4,000-க்கும் மேற்பட்டோருக்கு ரயில்வே துறையில் வேலை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிஐ இந்த ஊழல் தொடர்பான முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியது. கடந்த ஜூலை மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.