அல்மேர்: நெதர்லாந்து ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

ஹாலந்து எனப்படும் நெதர்லாந்து நாட்டில், சர்வதேச ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்தன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் லக்சயா சென்.

இந்தியர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூழ்கியிருக்க, இறுதிப்போட்டியில் ஜப்பான் வீரர் யூசுகே ஒனோடெராவுடன் மோதினார். முதல் சுற்றில் 15-21 என்ற கண்க்கில் தோல்வியுற்ற லக்சயா சென், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளை முறையே 21-14 மற்றும் 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்தப் போட்டி மொத்தமாக 1 மணிநேரம் மற்றும் 2 நிமிடங்கள் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக ‘வேர்ல்டு டூர்’ அந்தஸ்து பெற்ற ஒரு தொடரில் சாம்பியன் பட்டம் வ‍ென்றுள்ளார்.

இத்தொடரில் கோப்பையைக் கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீரரானார் லக்சயா சென். இதற்கு முன்னதாக, கடந்த காலங்களில், பிரகாஷ் படுகோனே, சேட்டன் ஆனந்த், அஜய் ஜெயராம், சவுரப் வர்மா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.