லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் பிரபுல் கோடா படேல், கடந்த ஆண்டு புதிதாக ஒன்றிணைக்கப்பட்ட தாதர் – நாகர் ஹவேலி மற்றும் டாமன் – டையூ யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல், 2020 டிசம்பரில் லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக இருந்த தினேஸ்வர் சர்மா மறைவை அடுத்து இந்த பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.
கேரளாவுக்கு மேற்கே உள்ள சிறு சிறு தீவுகளை உள்ளடக்கிய லட்சத்தீவு பகுதிக்கு பொறுப்பேற்று பிரபுல் படேல் வந்தது முதல் இந்த தீவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
குஜராத் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ.வான பிரபுல் படேல், மோடி மற்றும் அமித் ஷா-வுடன் நெருங்கி பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.
மாட்டுக்கறி விற்பனைக்கு தடை விதித்திருப்பதோடு, மது விற்பனைக்கு இருந்து வந்த தடையை நீக்கி இருப்பது இங்குள்ள இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலோர பாதுகாப்பை காரணம் காட்டி அங்கு மீன் பிடிக்க தடை விதித்திருப்பதால், அந்த தீவில் உள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்திக்கொள்ள வழிசெய்யும் புதிய சட்டத்தையும் கொண்டு வந்திருக்கிறார்.
குறுகலான சிறு சிறு தீவுகளை கொண்ட இந்த பிரதேசத்தில், அபிவிருத்தி என்ற பெயரில் இங்குள்ள மக்களுக்கு இருக்கும் வீட்டையும் பிடுங்கிக்கொண்டால் நாங்கள் கடலில் தான் விழுந்து சாக வேண்டும் என்று குமுறுகிறார்கள் இங்குள்ள மக்கள்.
என்ன உணவு உண்ணவேண்டும், நாங்கள் என்ன தொழில் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது போக நாங்கள் இங்கு வாழ்வதற்கான நிலத்தையும் அபகரிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று இங்கு வாழும் பெரும்பான்மையான கேரள மக்கள் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர்.
தாதர்-நாகர் ஹவேலி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மோகன்பாய் டெல்கர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார், சுயேச்சை எம்.பி. யான அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தில் பிரபுல் படேல் பெயரையும் எழுதியிருந்தது சர்ச்சையானது.
இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள பிரபுல் படேல் தற்போது லட்சத்தீவு பிரதேசத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி, அங்கு வாழும் பூர்வ குடி மக்களை அந்த தீவிலேயே சமாதி கட்ட நினைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து இவரை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.