சேலம்: மத்தியஅரசு அமல்படுத்திய, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற காரணங்களால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று சேலத்தில் நடைபெற்ற மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார்.
சேலம் மாவட்டம், சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை, சீலநாயக்கன்பட்டியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தோழமைக்கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். முஸ்லிம் லிக் கட்சித்தலைவர் காதர்மொகிதீன், விசிக தலைவர் திருமா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேலமுருகன், கொங்கு மக்கள் கட்சி ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பி.வி.கதிரவன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் இரா.அதியமான், கிறிஸ்தவ நல்லென்ன இயக்கம் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலைக் கட்சி தலைவர் முருகவேல்ராஜன் மற்றும் திராவிடர் கழகத் தலவர் கி.வீரமணி உள்பட கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, தமிழகம்தான் இந்தியா என்கிறோம், அதேபோல இந்தியாதான் தமிழகம் எனக் கூறலாம். மொழிகள், மதங்கள், கலாசாரங்கள், பண்பாடுகளின் ஒருங்கிணைப்புதான் இந்தியா. ஒன்றுபட்ட இந்தியா மீதான தாக்குதலாகவே தமிழ் மொழி, கலாசாரம் மீதான தாக்குதலை கருதுகிறேன்.
இந்தியாவை ஒன்றை சிந்தனைக்கு ஏற்றதாக மாற்றக்கூடிய மத்திய அரசின் முயற்சியை ஏற்க முடியாது. தமிழ் மொழி, கலாசாரம் பண்பாடுக்காக மட்டுமே நான் பேசவில்லை. எல்லா மொழிகளுக்குமாக பேசுகிறேன் என்றவர்,. முகக்கவச்சத்தால் எப்படி முகபாவம்தெரியாதோ அதுபோலத்தான் அதிமுக உள்ளது.. அதிமுக போன்ற தோற்றத்துடன் உள்ள கட்சி இப்போது முகக்கவசத்தை நீக்கினால் ஆர்எஸ்எஸ் ஆக இருக்கும். புலனாய்வுத்துறை மத்திய அரசின்வசம் இருப்பதால் தவறு செய்த அதிமுக முதல்வர் தலைகுனிய நேரிடுகிறது. தமிழகத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் பல லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.