சென்னை:
நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கும் தமிழக அரசு, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் இலவச சைக்கிள் திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிராமப்புற மாணவ மாணவிகளின் கல்விக்கு பேருதவியாக இருந்து வந்த விலையில்லா சைக்கிள் திட்டம் நிறுத்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு முதல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால், கிராமப்புறம் மற்றும் அனைத்து அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு எளிதாக வரும் வகையில் இலவச சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில், இதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்காத நிலையில், இந்த திட்டத்துக்கு மூடு விழா நடத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலமாகி உள்ளது.
கடந்த 2017-18ம் நிதியாண்டில், இலவச சைக்கிள் திட்டத்துக்கு ரூ.16 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சைக்கிள் திட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை மூலம், கடந்த 2013-14ம் ஆண்டு 217 கோடி ரூபாயும், 2014-15ம் ஆண்டு 218 கோடியும், 2015-16ம் ஆண்டு 235 கோடியும், 2016-17ம் ஆண்டு 250 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 2017-18ம் நிதியாண்டில் வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதும், நடப்பு ஆண்டு வெளியிடப்பட்ட பள்ளிகல் வித்துறை கொள்கை விளக்க குறிப்பில், விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் மூலம் 2017-18 மற்றும் 2018-19ம் கல்வியாண்டில் 11.56 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்படுவது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கிராமப்புற மாணவ மாணவிகளின் உயர்கல்விக்கு பேருதவியாக இருந்து வந்த, இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் தமிழக அரசு புறக்கணித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விலையில்லா மிதி வண்டி திட்டத்தை தமிழக அரசு நிறுத்த முடிவு செய்துள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.