சென்னை: அடிப்படை வசதிகள் இல்லை என கூறி தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக விடுதியில் மாணவிகள் சுமார் 10 மணி நேரம்  உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.  இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தரமணி பகுதியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு போதுமான வசதிகள் இல்லை என மாணவிகள் தரப்பில் பல முறை புகார் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தண்ணீர் உள்பட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக  விடுதியில் மாணவிகள்  குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது, அங்கு மேலும் மாணவிகள் தங்க வைக்கப்பட்டதால், அடிப்படை வசதிகளுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து,  தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின் விடுதி மாணவிகள், விடுதி நிர்வாகத்தை கண்டித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளுக்கு ஆதரவாக சட்ட பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து,  பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேராசிரியர்கள்  பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்களால் உறுதி வழங்க முடியாத  நிலை ஏற்பட்டதால்,  மாணவிகள் போராட்டத்தை வாபஸ் வாங்க மறுத்து போராடினர். இந்த  உள்ளிருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது.

இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன், சட்ட பல்கலைக்கழ  சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இரவு 11.45 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவிகள், இட நெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மூத்த வழக்கறிஞர்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக கூறினர். மேலும், கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவிகள் எச்சரிக்கை விடுத்தனர்.