சென்னை: தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேசிய எஸ்.சி, எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த ஆண்டு தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது

இந்த பதவிக்கு ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், எஸ்வி சேகர் உள்பட பலர் போட்டியிட்டனர். இந் நிலையில் திடீரென தற்போது தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து முருகன் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

எல். முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார். 6 மாதங்களாக தமிழக பாஜக தலைவர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது, அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.