சென்னை: கொரோனா பரவலைத் தடுக்க, உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், மாணாக்கர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டுமென்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்தில் பரவாமல் தடுக்க, உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இருமலுடன் கூடிய காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சளி பிரச்சினை, உடல் சோர்வு, மூச்சுத் திணறல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகள். எச்சில் வழியாகவும் இந்த வைரஸ் பரவுவதோடு கைகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் வழியாகவும் பரவும் வாய்ப்புள்ளது.

எனவே, கொரோனா பரவல் தடுப்பு முறைகளை, பள்ளி மாணாக்கர்களும் பெற்றோரும் கையாள வேண்டும். இருமல், தும்மல் உள்ள மாணாக்கர்கள், கைக்குட்டைப் பயன்படுத்த வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கைகளை சோப்பால் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.

நோய் அறிகுறி உள்ள நபரிடம் இருந்து, ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதையும், வெளியூர் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.