இயக்குநர் அறிவழகன்

செயற்கைக் கருவூட்டல் என்கிற அதி நவீன விஞ்ஞானத்துக்குப் பின்னால் வெள்ளையும் சிகப்புமாய் இருக்கும் கிரிமினல் பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது குற்றம் 23.

பாவ மன்னிப்பு அளிக்கும் பாதிரியார் மர்மமான முறையில் தேவாலயத்தில் இறக்க…  டாப் கியரில் துவங்கும் படம், அந்த பெப் குறையாமல் கிளைமாக்ஸ் வரை பயணிக்கிறது.

அருண்விஜய்

காணாமல் போன வி.ஐ.பி. பெண்மணியை  கண்டுபிடிக்கும் காவல் அதிகாரியாக  அருண் விஜய். ஊடுருவும் பார்வை, விரைப்பான  நடை  உடை, அதிரடியான சண்டை என வெளுத்து வாங்குகிறார் மனிதர். இதுவரை அவர் நடித்த படங்களை “”கிரிச்சானில்” வி்ட்டுவிட்டு, இந்த படத்திலிருந்து கணக்கு வைத்துக்கொள்ளலாம். இதே வேகத்தில் அடுத்தடுத்த படம் அளித்தால் நிச்சயம் பெரிய நடிகர் பட்டியலில் இடம் பிடித்துவிடுவார் அருண் விஜய்.

கொலைகாரர்களை பார்த்த சாட்சியாக வந்து, அருண்விஜய்யை காதலிக்கும் தென்றல் கேரக்டரில் மஹிமா. முழுக்க முழுக்க ஆக்ஷன் – த்ரில்லர் படம் என்பதால் இவருக்கு வாய்ப்பு குறைவுதான். ஆனாலும் கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்கிறார்.

ஆரம்ப காட்சிகளில் அருண்விஜய்யிடம் கோபம் காட்டுவதாகட்டும், பிறகு பயந்து நடுங்குவதாகட்டும், அப்புறம் காதலை வெளிப்படுத்துவதாகட்டும்.. சிறப்பு.

அருணின் அண்ணியாக வருகிறார் அபிநயா. குழந்தைக்கான ஏக்கம், செயற்கைக் கருத்தரிப்பு குறித்த மன உளைச்சல் ஆகியவற்றைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.

மஹிமா

இன்ஸ்பெக்டராக வரும் தம்பி ராமையா ரசிக்கவைக்கிறார்.

வம்சி கிருஷ்ணா, அர்விந்த் ஆகாஷ், விஜயகுமார், கல்யாணி நடராஜன், சுஜா வாருணி என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.

பாஸ்கரனின் ஒளிப்பதி சிறப்பு. அதுவும் அவ்வப்போது வரும் பறவைப் பார்வை காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார்.  விஷால் சந்திரசேகரின் இசை படத்துக்கு பலம்.

குற்றச் சம்பவங்களையும் அதை துப்பறிவதையும்  விறுவிறுப்புடன் மட்டுமின்றி யதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

அதோடு, “பெற்றால்தான் பிள்ளையா” என்ற கேள்வையையும் நம் மனதுக்குள் நச் என பதிய வைக்கிறார். பாராட்டுக்கள்.

குழந்தை இன்மை என்பதை பெண்கள் மீது மட்டுமே திணிக்கும் நம் சமுதாய அவலத்தையும்  பொட்டிலறைந்தற்போல சொல்லியிருக்கிறது படம். அதோடு, செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவமனை நிர்வாகங்கள் பல,  தங்கள் வாடிக்கையாளர்களை  எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது குற்றம் 23.

சிறு சிறு லாஜிக் மீறல்கள் இருந்தாலும், வேகமான திரைக்கதையில் அவை தெரியவில்லை. தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.