டெல்லி:

பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். ரூகி மற்றும் யாஷ் என்று பெயரிட்டுள்ள அந்த குழந்தைகள் என் வாழ்வில் மேலும் ஒரு அற்புதமாக சேர்ந்துள்ளனர் என்று கரன் ஜோகர் தெரிவித்துள்ளார். இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘ இது ஒரு உணர்வு பூர்வமான மகிழ்ச்சியாகும். இதன் மூலம் பெற்றோர் என்ற மிகப் பெரிய கடமையும், பொறுப்பும் எனக்கு வந்துள்ளதாக நினைக்கிறேன். குழந்தைகள் அளவற்ற அன்பை பெறும் வகையில் எனது கவனத்தையும், அக்கறையையும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வழங்க என்னை தயார்படுத்திக் கொண்டுள்ளேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

சாருக்கான் மூன்றாவது குழந்தை அப்ராம பிறந்த மும்பை மாஸ்ராணி மருத்துவமனையில் இந்த குழந்தைகள் கடந்த மாதம் பிறந்துள்ளது. 2014ம் ஆண்டில் இறந்த தனது தந்தையும் பிரபல பாலிவுட் சினிமா இயக்குனருமான யாஷ் ஜோகர் பெயரை ஆண் குழந்தைக்கு சூட்டியுள்ளார்.

‘‘அதிக அக்கறையும், உதவியும் செய்து குழந்தைகளை பெற்றெடுத்த அந்த தாயாரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவர் பாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றி கண்ட ‘குச் குச் ஹோத்தா ஹாய்’, ‘மை நேம் இஸ் கான்’, ‘ஆய் தில் ஹாய் முஸ்கில்’ போன்ற திரைப்படங்களை இவர் வழங்கியுள்ளார்.

இவர் சமீபத்தில் பெற்றோராக ஆவதை தெரிவிக்கும் வகையில், ஒரு புத்தகத்திற்கு ‘தி அன்சூட்டபிள் பாய்’’ என்று பெயரிட்டு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புத்தகத்தில்,‘‘ எனக்கு தெரியவில்லை, அடுத்து நான் என்ன செய்ய போகிறேன் என்று. ஆனால் நான் பெற்றோராக இருக்க விரும்புகிறேன். இது எப்படி நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இது அவசியம் என்று தோன்றுகிறது. அதிக அன்பு செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இது அவசியம் என்ற தோன்றுகிறது’’ என்று அவர் எழுதியிருந்தார்.

நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில் குழந்தைகளை பெற்றுக் கொடுத்த அந்த வாடகை தாய்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் சிகிச்சை அளித்த டாக்டர் ஜத்தின் ஷாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் எங்களது குடும்ப பயணத்தில் உறுப்பினராகியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.