குற்றம் கடிதல்: 21
மதுரையில் மேலகோபுர வாசலுக்கு அருகில் உள்ள தெருவில் எனது உறவினர் வீடு இருந்தது. அருகே ஒரு அரிசிஆலைக்காரர் வீடு இருந்தது. சிறு குழந்தையாக இருக்கும்போது அதைப்பார்த்துள்ளேன். அந்த வீட்டில் உள்ள அண்ணனும் எனது உறவினர் வீட்டு அத்தான்களும் நண்பர்கள். அப்புறம் அந்த அண்ணன் ஓடிப்போய் விட்டதாகக் கூறினார்கள்.
1970களின் கடைசியில் ஒரு படம் வந்தது. இனிக்கும் இளமை. பெண்கள் அப்படத்தைப் பார்த்து முகம் சுழித்தனர். காரணம் அப்படத்தில் எதிர்மறை பாத்திரம். அந்த வேடத்தில் நடித்தவர்தான் எனது  கவனத்தைக் கவர்ந்தார். ஒரு ஆபாசமான பாத்திரத்தை மிகக் கன்னியமாக நடித்திருந்தார்.
அப்புறம் வீட்டில்தான் அவர் ரைஸ்மில் அண்ணன் என்றார்கள். அண்ணன் எதிர்மறை கேரக்டரில் நடித்தது யாருக்கும் பிடிக்கவில்லை. நானும் ஒரு தற்குறி. அதைவிட எப்போதும் வீட்டைவிட்டு ஓடுவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்ததால் அந்த அண்ணன் பேரைச்சொல்லித்தான் அப்போதெல்லாம் என்னைத் திட்டுவார்கள்.

சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்த்
சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்த்

அப்புறம் தூரத்து இடி முழக்கம் என்று ஒரு படம். மிக அற்புதமான படம். பூடகமான கதை. படமாக்கப்பட்டவிதம் அற்புதமாக இருக்கும், இதில் அந்த அண்ணன்தான் கதாநாயகன். பெயரை அப்போதுதான் கவனித்தேன் – விஜயகாந்த்.
அடுத்து சட்டம் ஒரு இருட்டறை. அண்ணாவின் தொடரை தலைப்பாகக் கொண்ட படம். அப்படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. அடுத்து சிவப்பு மல்லி. கேட்கவே வேண்டாம். விஜயகாந்த் ரசிகனாகியாச்சு. சாதிக்கொரு நீதி, சிவந்த கண்கள், சட்டம் சிரிக்கிறது என தொடர்ந்து நடித்த படங்களும் ஒரு கோபக்கார நாயகனை அறிமுகப்படுத்தியதால் இளைஞர்களின் நாயகனானார்.
ஆனால் ரஜினி. கமலுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பதில் முன்னணியில் இருந்தார். அப்புறம் வழக்கம்போல ஸ்டீரியோடைப் படங்கள்.
இளம்வயதில் சினிமா வாய்ப்புத்தேடி சென்னை சென்ற அவர் கடுமையான வறுமையை எதிர்கொண்டு போராடி ஒரு ஹீரோவாக ஆனாலும் பழைய நட்புகளை மறக்கவில்லை, மதுரை வரும்போது பழைய நண்பர்களையும் பார்ப்பதுண்டு. அதை எனது உறவினர்கள் (ஒருகாலத்தில் திட்டியவர்கள். என்னையும் அவரைப்போய் ஆகிவிடாதே என்றவர்கள்தான்) மிகவும் பெருமையாக கூறினார்கள்.
எனது உறவினருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஒரு சர்பத்கடை உண்டு. விஜயகாந்த் மதுரை வரும்போது, குறிப்பாக கோயிலில் சூட்டிங் இருக்கும்போது கடைக்கு வந்து பழைய நண்பர்களான எனது உறவினர்களை பார்த்து நலம் விசாரிப்பதை விஜய்காந்த் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருமுறை அந்த கடையில் நான் இருந்தபோது பளபளக்கும் உடையில் ஒருவர் வந்தார். பிரவுன் கலர் பேண்ட். சிவப்பு ஜெர்கின்போல் பளபளக்கும் சட்டை. கருப்பு கண்ணாடி. உறவினர்கள் உடனே அவரை வரவேற்றனர். அதுஒரு பெட்டிக்கடை என்பதால் வெளியே நின்று பேசினார். அன்புடன் கொடுத்த  சர்பத்தை வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் விடைபெற்று சென்றுவிட்டார். ஒரு ஹீரோவாக இல்லாமல் ஒரு நண்பனாக வந்து பார்த்து சென்றது அசத்தியது. அவர் அங்கு நின்ற சிறிது நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இருந்த கூட்டமெலாம் இங்கு திரண்டது.
ஊமை விழிகள் வெளியான போது நான் பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதிகளில் (வெட்டியாகத்தான்) சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போவெல்லாம் வீரப்பன் அமைதியாகத்தான் இருந்தார். குமாரபாளையத்தில் படம் பார்த்தேன். அவருக்கு அப்படம் திருப்புமுனையை கொடுத்தது.
இப் படத்தின் வசூலில் ஒரு பகுதியை ஈழ விடுதலை போராட்டத்துக்கு நிதியாக விஜயகாந்த் அறிவித்தார். அதோடு இந்த சமயத்தில்தான் ஈழம் கிடைக்கும்வரை பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்றும் அறிவித்தார்.
ஏற்கனவே திமுக ஆதரவாளராக அறியப்பட்டிருந்தாலும், இந்த இரண்டு விஷயங்களும் அவருக்கு ஒரு அழிக்கமுடியாத அரசியல் முகத்தை வழங்கியது. அதற்கேற்ப தனது படங்களில் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார். இது அவருக்கு புரட்சிக் கலைஞர் பட்டத்தை தவிர்க்க இயலாமல் வழங்கினர்.
அவருக்கான ரசிகர் பட்டாளம் திடப்பட்டு வளர்ந்து வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் (1987 – 1995) பலருக்கும் எம்.ஜி,ஆரை இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற கனவு இருந்தாலும் (டி. ராஜேந்தர், கே. பாக்கியராஜ், ராமராஜன்) தனது ரசிகர் தளத்தை அரசியல் படுத்தத் தெரியவில்லை. ஆனால் ரசிகர் மன்றம் மூலம் நற்பணிகள், ஈழ ஆதரவு என்று தளத்தை பலப்படுத்திய விஜய்காந்த் உடனடியாக தனிக்கட்சி ஆரம்பிக்காமல் 1993-ல்பஞ்சாயது தேர்தலில் ஆங்காங்கே தனது ஆட்களை நிறுத்திப் பார்த்தார். இதில் ஓரளவு பலன் கிடைத்தது.
இருந்தாலும் அவசரப்படாமல் நிதானமாக தனது தளத்தை பலப்படுத்தி வந்தார். இதற்காக தனது படங்களின் களம் மற்றும் வசனங்களில் கவனம் செலுத்தினார்.
மொத்தத்தில் தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கான அழுத்தங்கள் வெளியில் இருந்து வருவது போல பார்த்துக் கொண்டார். வெளிப்படையாக அரசியல் பேசினார். ஆனால் அரசியல் அமைப்பு தொடங்குவது பற்றி அவசரப்படவில்லை.
அவர் தனிக்கட்சி தொடங்கியதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகள் என்பது மிக முக்கியமான ஆண்டுகள். திரைப்படங்களிலும் பொதுவெளியிலும் தேர்ந்தெடுத்துப் பேசினார். தேசியம், ஊழல், தீவிரவாதம் ஆகியவை அவரது உள்ளடக்கமாக இருந்தது.
இவ்வாறு கடந்த பத்து ஆண்டுகளுக்குமேல் சேகரமான ஆதரவுத்தளத்துக்கு வடிவம் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தனிக்கட்சி தொடங்கினார். வைகோ தனிக்கட்சி தொடங்கியபோது ஏற்பட்ட அதே பரபரப்பும், எதிர்பார்ப்பும் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய்காந்த் தனிக்கட்சி தொடங்கியபோதும் பற்றிகொண்டது.
கட்சியின் தொடக்க நிகழ்வு மதுரை அருகே பிரமாண்ட பந்தலிட்டு நிகழ்ந்தது. அனைத்து கட்சிகளின் மூச்சை அடைக்கச் செய்யும் அளவுக்கு மக்கள் திரட்டப்பட்டனர். தற்செயலாக அன்றைய இரவில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைவரை தரைவழியாகப் பயணிக்க நேர்ந்தது. அப்போது,  பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் மாநாட்டுக்காக வந்த விஜயகாந்த் ரசிகர்கள் மன்னிக்கவும் அவரது கட்சித் தொண்டர்கள் எதிர்காலக் கனவுகளோடும் நம்பிக்கைகளோடும் உறசாகமாகத் திரும்பிய கோலத்தை எனது தரைவழிப் பயணத்தின்போது முழுமையாகக் கண்டேன். ஒரு அரசியல் புயலுக்கான அறிகுறிகள் நன்றாகவே தெரிந்தன.
ஆனால், அதன்பிறகு தேமுதிக புல்பாயிலாக வேகாமல் ஆப்பாயில் ஆனதுதான் சோகம்.
காரணம், வைகோ செய்த அதே தவறையே கேப்டனும் செய்தார்.
தனக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட காலத்துக்காகவாவது மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுக்காமல் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடாமல் சிறைக் கம்பிகளை எண்ணாமல் எக் கட்சியாலும் தனது தளங்களை பலப்படுத்த முடியாது. வெறும் மீடியா வெளிச்சங்களால் தனது கட்சி வளர்ந்து விடும் என்று நினைத்தனர்.
இரண்டாவதாக, அவர்களைப் பயன்படுத்த நினைத்த பெருமுதலைகள், கார்ப்பரேட்டுகள் தங்கள் ஏஜண்டுகள் மூலம் கொம்பு சீவிவிட்டனர். யதார்த்ததை உணரச்செய்ய விடவில்லை.
இதுதான் இந்த அமைப்பின் டிசைன் ஆகும்.
நான் ஒரு பத்திரிகையாளன், அனுபவமுள்ளவன் என்றால் என்னால் இந்த துறைக்கு என்ன செய்யமுடியும் எந்த அளவுக்கு திறமையை வளர்த்துக் கொள்ளமுடியும் என்றெல்லாம் நினைக்காமல் என்னிடம் உள்ள திறமையை எவ்வளவு குறைந்த விலைக்கு வாங்கமுடியும் என்று பார்ப்பதுதான் இந்த அமைப்பின் டிசைன். இதுதான் விஜயகாந்துக்கும் நடந்தது.
அவர் தனது கட்சியின் தளங்களை மேலும் அரசியல்படுத்த வாய்ப்பாளிக்காமல் அவருக்கு கொம்பு சீவிவிட்டு, அவரது ஆதரவு தளங்களை குறைந்த விலைக்கு வாங்க, அதாவது கூட்டணிகளுக்கு இழுக்க கவர்ச்சிகரமான பேரங்களில் இழுத்தனர்.
இதில் கார்ப்பரேட்டுகள் மற்றும் பாஜகவின் பங்கு முக்கியமானது. இதே டிசைன்தான் மதிமுகவையும் பாமகவையும் கவிழத்தது. சில எம்பிகள், மத்திய அமைச்சரவை பதவிகள், பிளஸ், பிளஸ்கள் …
கட்சித்தலைவர் விஜயகாந்த்
கட்சித்தலைவர் விஜயகாந்த்

இதனால் விஜய்காந்த இழந்ததுதான் அதிகம். பாமக ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு உள்ள அமைப்பு. மதிமுகவுக்கு பரவலாக செல்வாக்கு இருந்தாலும் அது மிகக் குறைவு. ஆனால் விஜயகாந்த் செல்வாக்கு என்பது தமிழகம் முழுவதும் பரவலானது. பல ஆண்டுகள் கடைப்பிடித்த நிதானத்தை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தால் அதன் தளம் நன்றாக வலுப்பட்டிருக்கும்.
குறிப்பாக, விஜயகாந்த் மென்மையான இந்துத்வவாதி. இதுதான் அவரை யோசிக்கவிடாமல் பாஜக பக்கம் தள்ளியது. ஆனால் அவர் காங்கிரஸ் தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்தார். அவர் காங்கிரசுடனேயே நெருக்கத்தைத் தொடர்ந்திருந்தால் காங்கிரஸ் + தேமுதிக என ஒரு தமிழகம் முழுவதும் செல்வாக்குள்ள ஒரு அணி உருவாகியிருக்கும். காங்கிரஸ் + தேமுதிக என்ற பலமான நிலையில் திமுக அல்லது அதிமுகவுடன் பேரம்பேசும் சக்தியை வளர்த்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்கள், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் முடிவுகள் வேறுமாதிரியாக ஆகியிருக்கும்.
இப்போதும் நேரம் இருக்கிறது கேப்டன் அவர்களே!
இப்படிக்கு ஒரு கேப்டன் ரசிகன்.