டெல்லி: ஹரியானா எல்லை பகுதியான சிங்குவில் விவசாய தொழிலாளி அடித்து கொல்லப்பட்டுள்ள, அவரது கைகள் வெட்டப்பட்ட நிலையில்,  டெல்லி மற்றும் அதன் எல்லை பகுதிகளில் விவசாயிகளின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

டெல்லி-ஹரியானா எல்லை பகுதியான சிங்குவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிக்கு அருகே,  கடந்த வெள்ளிக்கிழமை (அக்.15) 32 வயதான பட்டியலின விவசாய தொழிலாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதுடன்,  அவரது இடக்கை மணிக்கட்டு வெட்டப்பட்டு, பேரிகார்டில்  தொங்கவிடப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அருகே விவசாயிகள் கூட்டமாக இருக்கும்போது, இந்த சம்பவம் அவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதுமட்டுமின்றி, இந்த கொடூரமான கொலையை, பயங்கரவாரத இயக்கத்தைச் சேர்ந்த  சீக்கிய அமைப்பான நிகாங் (Nihang) அரங்கேற்றியிருப்பதாகவும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், வழக்கறிஞர்கள்,  ஸ்வாதி கோயல் மற்றும் சஞ்சிவ் நேவார் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ள னர். அவர்களது மனுவில்,  கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்மூலம், தங்களின் உயிர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இடரை ஏற்படுத்தி வருகின்றனர். இது மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் விவசாயிகள் முகாமிட்டிருக்கும்   சிங்கு எல்லையில் விவசாய கூலித் தொழிலாளி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே நீதிமன்றம் இதனை அவசர வழக்காக கருதி, டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விதமான போராட்டங்களுக்கும் தடை விதிக்க எழுத்துப்பூர்வமாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

கொடூரம்: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதியில் கொலை செய்யப்பட்டு, பேரிகாடில் தொடங்கவிடப்பட்ட கையில்லாத உடல்….