டில்லி

ஜிஎஸ்டி அமுலாக்கத்தின் போது அறிவிக்கபட்ட இழப்பீட்டுத் தொகையை 2022க்கு மேலும் அளிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ஜி எஸ் டி மத்திய அரசால் அமுலாக்கப்பட்டது. அப்போது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியால் வருமான இழப்பு ஏற்படும் என மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கான  இழப்பீட்டுத் தொகையை ஐந்து வருடங்களுக்கு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஐந்து வருடக் கெடு வரும் 2022 ஆம் வருடத்துடன் முடிவடைகிறது.

நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் நிதி அயோக் கூட்டம் நடந்தது. இதில் பல மாநில முதல்வர்கள் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, “மத்திய அரசு ஜிஎஸ்டி அமுலாக்கத்தின் போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட 2022 வரை இழப்பீட்டுத் தொகை அளிக்க அரசு ஒப்புக் கொண்டது. அதற்குள் மாநில அரசுகள் கூடுதல் வருமானத்துக்கு ஏற்பாடுகள் செய்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியது.,

ஆனால் மாநில அரசு எதிர்பார்த்த அளவுக்கு கூடுதல் வருமானம் ஏற்பாடு செய்ய முடியாத அளவுக்கு உள்ளன. இதனால் மாநிலத்துக்கு 2022-23 க்கு பிறகு மிகவும் பொருளாதார இழப்பு ஏற்படும்.  இதனால் மாநிலத்தின் பல திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்களை நிறைவேற்ற முடியாத நிலை உண்டாகும். எனவே மாநிலத்தின் வருமான இழப்பை ஈடு கட்ட தொடர்ந்து மத்திய அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளர்.