ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை முறைப்படுத்தும் மாநில அரசின் திட்டத்தை தாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என தமிழக பாஜகவின் முக்கிய தலைவரான கே.டி ராகவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில நாளேடான தி ஹிந்துவுக்கு அவர் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டி கீழே:-

கேள்வி: கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படும் என மாநில அரசு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன ?

பதில்: இது தொடர்பான அரசின் நிலைபாட்டை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது உள்நோக்கம் கொண்ட முடிவு. பல மன்னர்கள் இந்த நிலத்தை கோவில்களுக்கு தானமாக வழங்கியுள்ளனர். அதை தனி மனிதரோ அல்லது அரசாங்கமோ பட்டா போட்டு வழங்க முடியாது. ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோவில் நிலங்களை விட்டுக்கொடுப்பது எப்படி சரியான முடிவாக இருக்கும் ?

கோவில்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என அறநிலையத்துறை சட்டவிதிகள் கூறுகிறது. ஆனால் இந்த அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே வழங்க முற்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆகஸ்ட் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அரசு ஏன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். நிலங்களின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும். இதை அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று, நிலத்தின் தன்மையை ஆராய்ந்து வழங்குவோம் என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் அவை அனைத்தும் நீர்த்துப்போகக்கூடிய செயலாகும்.

இன்னும் சொல்லப்போனால் பல கோவில்கள் இன்றைக்கு வருவாய் இன்றி இருக்கின்றன. சில கோவில்களில் அன்றாட பூஜைகளை நடத்த கூட போதிய வருவாய் இல்லை. இதுபோன்ற பிரச்சனைகளை கையாண்டு, அதற்கு தீர்வு காண்பது தான் அரசாங்கம் மற்றும் அறநிலையத்துறையின் பணியே தவிற, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது அல்ல.

கேள்வி: அரசியல் அழுத்தங்கள் காரணமாக நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே அரசு வழங்க உள்ளதாக நீங்கள் எண்ணுகிறீர்களா ?

பதில்: அரசியல் அழுத்தம் இருப்பது போல எனக்கு தெரியவில்லை. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்கள் சாதாரன நபர்களாக கூட இருக்கலாம். அவர்களை வெளியேற்ற வேண்டும். நல்ல எண்ணத்துடன் இந்த நிலங்கள் கோவிலுக்கு கொடுக்கப்பட்டன. அறநிலையத்துறை தான் இதை பாதுகாக்கும் அதிகார மையம். நிர்வாக அமைப்பாக அவர்கள் எப்படி இதை அனுமதிக்கலாம் ?

கேள்வி: இதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வீர்களா ?

பதில்: நிச்சயமாக. இதை அவர்களுக்கு புரியும் படி, தவறு என்று எடுத்துறைத்தாக வேண்டும். அவர் இதில் தனது கவனத்தை திருப்ப வேண்டும் என வலியுறுத்தப்படும். ஆளும் கட்சி எங்களுடைய கூட்டணி கட்சியாக இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் தவறானது. இது தொடர்பான தங்களது பார்வையை அவர்கள் மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இல்லையெனில் அடுத்தக்கட்ட முடிவுகள் பற்றி நாங்கள் ஆலோசிக்கவேண்டியிருக்கும்.

கேள்வி: அடுத்தக்கட்ட முடிவு என்றால், அது என்னவாக இருக்கும் ?

பதில்: எங்களுடைய ஆலோசனையை அவர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் நீதிமன்றமன் செல்வோமா என்பது தெரியவில்லை. ஆனால் இதுபோன்று நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கினால், நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். அறநிலையத்துறை கோவில் நிலத்தையும், கோவிலையும் பாதுகாக்கவேண்டும். அவ்வாறு பாதுகாக்க இயலாவிட்டால், அறநிலையத்துறையை கலைத்துவிடுங்கள்

இவ்வாறு கே.டி ராகவன் தெரிவித்துள்ளார்.