கொச்சி

கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகம் தனது பழைய பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்ற உள்ளது.

கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.   கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கழகத்துக்கு வருமானம் முழுவதுமாக குறைந்ததால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது   தற்போது கேரள மாநிலத்தில் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் சமூக இடைவெளி காரணமாகக் குறைந்த பயணிகளுடன் பயணம் செய்வதால் இழப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதற்காகப் போக்குவரத்துக்கழகம் பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.   கழக  அதிகாரி ஒருவர், “தற்போது போக்குவரத்துக் கழகத்துக்கு பயணச்சீட்டு மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவாக உள்ளது.  போக்குவரத்து சேவை தொடங்கியும் திருவனந்தபுரத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக இன்னும் போக்குவரத்து நடைபெறவில்லை.  கடன் சுமை மேலும் மேலும் அதிகரிப்பதால் நாங்கள் தற்போது முழுகும் நிலையில் இருக்கிறோம்.

எனவே நாங்கள் பழைய பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்ற முடிவு செய்துள்ளோம். தற்போது மாவட்டத்தில் 24 பணிமனைகள் உள்ளன.  ஒவ்வொரு பணிமனையில் இருந்தும் ஒரு பேருந்துக்கு உரிமம் பெற எண்ணி உள்ளோம்.  இதற்காக சப்ளைகோ, குடும்ப ஸ்ரீ, ஹார்டிக்ராப் , மற்றும் சிறைத்துறையிடம் பேசி வருகிறோம்.  இந்த இடங்களில் உற்பத்தியாகும் பொருட்களைப் பேருந்துகள் மூலம் எடுத்துச் சென்று விற்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.  இந்த திட்டம் அமைக்கப்பட்ட பிறகு அவர்கள் எங்கள் மூலம் மளிகைப் பொருட்களைப் பெற முடியும்.  நாங்கள் இதற்காகப் பழைய பேருந்துகளைப் பயன்படுத்த உள்ளோம்.  காலாவதியாகும் நிலையில் உள்ள பேருந்துகள் மட்டுமே இதற்குப் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.