பெங்களூரு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்  கே.எஸ்.அழகிரி, பெங்களூரு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார்.  அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என தகவல்கள் பரவி வந்தன.  தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது. 3 பேர் நேரடியாக களத்தில் இறங்கினர்.  காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கட்சி தலைவர் பதவியை பிடிக்க முயல்வதாக தகவல்கள் பரவின. மேலும் அவருக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில், கரூர் தொகுதி எம்.பி, ஜோதிமணி, திருவள்ளூர் தொகுதி எம்.பி உள்பட சிலர் தலைவர் பதவியை பிடிக்க கோதாவில் இறங்கினர். இதற்கிடையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் சசிகாந்த் பெயரும் அடிப்பட்டது.

இந்த நிலையில், கேஎஸ்அழகிரி தனது ஆதரவாளர்களான எம்.பி. எம்எல்ஏக்களுடன் பெங்களூரு சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, வேளச்சேரி எம்.எல்.ஏ ஜே.எம்.கே ஆசன் மவுலானா, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர், சோழிங்கர் எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்னம், கொளச்சல் எம்.எல்.ஏ ஜெ.ஜி பிரின்ஸ், விருத்தாச்சலம் எம்.எல்.ஏ எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்  இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி குறித்து எதுவும் பேசவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையிலேயே நேரில் சந்தித்ததாக தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 2019 முதல் தலைவர் பதவியில் நீடித்து வருகிறார். அவரை மாற்ற சிலர் முயற்சித்து வருகின்றனர்.