சென்னை: ராகுல்காந்தியின் பாதயாத்திரை நாளை தொடங்க உள்ள நிலையில், கன்னியாகுமரிக்கு அலை அலையாய் வாருங்கள் என கட்சியினருக்கும், பொது மக்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்காந்தி 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

இத்தகைய பயணம் ஏன் தேவைப்படுகிறது?, எதற்காக நடத்தப்படுகிறது? என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இந்த பயணத்தை மேற்கொள்ளும்போது கிராமங்கள், சிறு நகரங்கள், பெருநகரங்கள் வழியே நடந்து சென்று மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களை புரிந்துகொண்டு, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற முயற்சியில் தான் ராகுல்காந்தி பயணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை கண்டுணருகிற முயற்சியே இந்திய ஒற்றுமை பயணம். சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் அடிப்படையில் சமூகரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள்.

ஓர் இந்தியன் தன்னுடைய சக இந்தியனுடன் சண்டையிட்டுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே புதுப்புது சதித்திட்டங்கள் தினந்தோறும் உருவாக்கப்படுகின்றன. பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்துள்ளது. பிளவுபடுத்தப்பட்ட சமூகத்தால் வலிமையுடன் இருக்க முடியுமா?, அரசியல் ரீதியாக மக்களின் குரல் இன்றைக்கு ஒடுக்கப்படுகிறது. நமது அரசியல் சாசன உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

அரசமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்தியாவை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின்படி பிளவுபடுத்துகிற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. பிளவுபட்ட இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இணைக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. ராகுல்காந்தி மேற்கொள்கிற இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்த்து இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை, அரசமைப்புச் சட்டம், ஜனநாயக அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைவரும் இணைய வேண்டுமென்று அறைகூவல் விடுத்து அழைக்கிறோம். இந்திய ஒற்றுமை பயணத்தில் அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வல்லுனர்கள் இவர்களோடு நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்திய ஒற்றுமை பயணம் கன்னியாகுமரியில் இருந்து 7-ந்தேதி மாலை 4 மணியளவில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காமராஜ் மண்டபத்திற்கு சென்ற பிறகு காந்தி மண்டபத்தில் ராகுல்காந்தியிடம், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்குகிறார். இதைத்தொடர்ந்து 600 மீட்டர் பயணத்தை மேற்கொண்டு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று வரலாற்று புகழ்மிக்க உரையை நிகழ்த்துகிறார்.

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைவரும் இணைய கன்னியாகுமரிக்கு அணி அணியாக வாருங்கள், அலை அலையாக வாருங்கள் என தமிழ் கூறும் நல்லுலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அன்போடு அழைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை: தமிழகத்தில் 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தியின் பயணத்திட்டம்.. முழு விவரம்….