சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நீ என்ன சாதி..? என நிருபரை பார்த்து டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்த புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் படி, தென்காசி தனித் தொகுதி ஒதுக்கப்பட, டாக்டர் கிருஷ்ணசாமியே அதில் நேரடியாக களம் கண்டார். அவரை எதிர்த்து திமுக தரப்பில் தனுஷ் எம்.குமாரும், அமமுக தரப்பில் பொன்னுத்தாயியும் களமிறங்கினர். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணசாமியை, திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் வீழ்த்தினார்.
இந்நிலையில் இன்று சென்னை பொதிகை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, “பத்திரிகையாளர் ஒருவரிடம், “நீ என்ன சாதி..?” என்று கேட்டார். இதனால் கொதிப்படைந்த நிருபர்கள், “நீங்கள் அப்படி பேசியது தவறு. எக்காரணம் கொண்டும் பத்திரிகையாளர்களிடம் சாதி பெயர் கேட்பது தவறு” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் தான் அவ்வாறு கேட்டதற்கு கிருஷ்ணசாமி மன்னிப்பு கூறியதால், நிருபர்கள் அமைதியடைந்தனர்.