தனது மகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்து, முதல்வர் ஒதுக்கீட்டில் சீட் வாங்கினாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல் அசடு வழிந்து நழுவினார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
நீட் குழறுபடிகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி, தீர்வு கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் தமிழகம் முழுதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், இதர துரை வி.ஐ.பி.க்கள் என்று பலரும் அனிதாவுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம் முழுதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் மத்தியில் ஆளும் பாஜகவும், புதிய தமிழகம் கட்சி தலைர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட சிலரும் நீட் தேர்வை ஆதரித்து பேசி வருகிறார்கள். மேலும், மாணவி அனிதாவை அரசியல் ஆதாயத்துகாக சிலர் தற்கொலைக்கு தூண்டியதாகவும் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த முன்னால் எம்.எல்.ஏ. பாலபாரதி, “நன்றாக படித்த ஏழை அப்பாவிப் பெண் அனிதா, மருத்துவம்தான் படிக்க வேண்டுமா என்று டாக்டர் கிருஷ்ணசாமி கேட்கிறார். ஆனால் மதிப்பெண் குறைவாக பெற்ற தனது மகளுக்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்து மருத்துவ சீட் பெற்றார். அது நியாயமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமியிடம் செய்தியாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது, “அந்த பொம்பளையை நான் பார்த்ததே இல்லை” என்று பாலபாரதி குறித்து தரம்தாழ்ந்து பதில் அளித்தார்.
இந்த நிலையில், இன்று சென்னை கோட்டைக்கு வந்த டாக்டர் கிருஷ்ணசாமி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள், “குறைவான மதிப்பெண் பெற்ற உங்கள் மகளுக்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் வைத்து மருத்துவ சீட் வாங்கியது உண்மைதானா” என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளிக்க முடியாத கிருஷ்ணசாமி, அசடு வழிந்தபடியே, “இப்போது நாம் பேச வந்த விசயம், அனிதாவைப் பற்றியது.. அதாவது” என்று ஆரம்பித்தார்.
ஆனால் செய்தியாளர்கள் விடாமல், அதே கேள்வியைக் கேட்டனர். அதற்கு அசடு வழிய சிரித்த கிருஷ்ணசாமி, ஏதேதோ சொல்லி சமாளிக்க முயன்றார். செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டனர்.
ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல், “மீண்டும் சந்திப்போம்” என்று கூறி டாக்டர் கிருஷ்ணசாமி நழுவினார்.