பெங்களூரு: கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., டாக்டர் ஏ.செல்லக்குமார் கோரிக்கையை ஏற்று ஓசூருக்கு மெட்ரோ பாதை அமைக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  ஓசூருக்கான மெட்ரோ பாதையின் நீளம் 20.5 கிமீ என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 11.7 கிமீ கர்நாடகா எல்லைக்குள் வருகிறது. இதற்கு கர்நாடக மாநில பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகம், டெல்லி உள்பட  நாட்டின்  பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இருப்பது போல கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளன. கர்நாடகா விலும் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூருவிலிருந்து கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள பொம்ம சந்திரா பகுதி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகளை கர்நாடக அரசு அமைத்து வருகிறது.

இந்த திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. செல்லக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து,  கடந்த சில மாதங்களக்கு முன்பு தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை  சந்தித்து பேசினார். அப்போது,  அவரிடம் மெட்ரோ ரயில் சேவையை ஓசூர் வரை நீட்டித்து தர வேண்டும் செல்லக்குமார் வேண்டுகோள் விடுத்தார். ஓசூர் நகரத்திலிருந்து பெங்களூருவுக்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கானோர்  வேலை நிமித்தமாகவும் தொழில் நிமித்தமாகவும் சென்று வந்துக் கொண்டிருக் கிறார்கள். ஓசூர் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி வரை கர்நாடக அரசு மெட்ரோ ரயில் ரயில் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை ஓசூர்  நகரம் வரை நீடித்தால் இரு நகர மக்களுக்கும் பயனாக இருக்கும் என்று கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது, ஓசூர் நகரையொட்டி உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளின் மற்றும் நிறுவனங்களின் தலைமை அலுவலகம் பெங்களூரு நகரில்தான் அமைந்துள்ளது. அதனால் மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டித்தால்,  பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அதிக வருவாய்  கிடைக்கும் என கூறினார்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. செல்லக்குமார்  வேண்டுகோளுக்கு பலன் கிடைத்துள்ளது. நம்ம மெட்ரோ 2-ம் கட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஆர்.வி.-சாலை-பொம்மசந்திரா வழித்தடத்தை (ரீச் 5) ஓசூர் வரை நீட்டிப்பதற்கான முன்மொழிவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது, இதை தமிழக அரசே ஆய்வு நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விரிவாக்க திட்டத்துக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளர் மே 23 அன்று  ஒப்புதல் அளித்துள்ளதாக,  பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ்  தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசியலைத்தாண்டி, இரு மாநிலத்துக்கு இடையே நிலவும்  சர்ச்சைக்கிடையில்,  ஒரு பெரிய நேர்மறையான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பாக பர்வேஸ் எழுதியுள்ள கடிதத்தில்,  “கர்நாடக முதல்வர் இந்த திட்டத்தை தமிழக அரசு நடத்தலாம் என்று குறிப்பிட்டு ஒப்புதல் அளித்துள்ளார். பொம்மசந்திரா முதல் ஓசூர் வரையிலான வழித்தடத்தை ஆய்வு செய்யுங்கள் என்று தமிழக மெட்ரோ நிர்வாகத்துக்கு தெரிவித்து உள்ளார்.

அதன்படி, கர்நாடக எல்லைப்பகுதியான -பொம்மசந்திரா பகுதியில் இருந்து  ஓசூருக்கான மெட்ரோ பாதையின் நீளம் 20.5 கிமீ என மதிப்பிடப் பட்டுள்ளது, இதில் 11.7 கிமீ கர்நாடகா எல்லைக்குள் வருகிறது. மெட்ரோ ரயில் கொள்கை 2017ன் வழிகாட்டுதல்களின்படி, மாநில எல்லைகளைத் தாண்டிய திட்டங்களைப் பற்றிப் பேசும் அண்டை மாநிலம் ஒரு ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று BMRCL கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே திட்டச் செலவைப் பகிர்வது மற்றும் செயல்பாட்டின் போது பண உதவி போன்ற விஷயங்களில் “அதிக ஒருங்கிணைப்பு தேவை” என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார், இந்த திட்டத்திற்கான ஆய்வை மேற்கொள்ள பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். அதுபோல,  “சென்னை மெட்ரோவில் உள்ள அதிகாரிகளிடம் பேசினேன். பி.எம்.ஆர்.சி.எல்., ஆய்வு நடத்துவது நல்லது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக கர்நாடக முதல்வருக்கு விரைவில் கடிதம் எழுதுவேன்,” என்றார். உள்கட்டமைப்பை நகலெடுப்பது பற்றி கேட்டதற்கு, இரு நகரங்களையும் இணைக்கும் வெவ்வேறு முறைகளில் எந்த முரண்பாடும் இல்லை என்று டாக்டர் செல்லகும்ரா கூறினார். “சென்னையின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் மெட்ரோ மற்றும் ரயில்கள் உள்ளன. இரண்டும் முக்கியம்,” என்றவர், இந்த திட்டத்திற்கு தேவையான அனுமதி கிடைத்தவுடன் நிதி பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார்.