கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி பள்ளி மாணவர்களுக்கு பணம் கொடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையம் அவர்மீது நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் கே.பி.முனுசாமியும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஏ.செல்லக்குமார், அமமுக சார்பில் கணேச குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஸ்ரீ காருண்யா), நாம் தமிழர் கட்சி சார்பில் மதுசூதனன் உள்பட பலர் களத்தில் உள்ளனர்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பல முறை போட்டியிட்டு வென்ற தொகுதி கிருஷ்ணகிரி தொகுதி. இங்கு அவரது குடும்பத்துக்கு இன்றுவரை தனிப்பட்ட செல்வாக்கு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காங்கிரஸ் கட்சி, அந்த தொகுதி வேட்பாளராக வெளியூரை சேர்ந்த செல்லக்குமாரை நிறுத்தி உள்ளது.
அங்கு பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிமுக – காங்கிரஸ் இடையே இங்கு நேரடிப் போட்டி நிலவுகிறது. அதிமுகவின் முனுசாமி உள்ளூர் வேட்பாளர் என்பதும், செல்லக்குமார் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக எதிரொலிக்கிறது. இதனால் பலத்த போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் கேபி முனுசாமியை ஆதரித்து ஊத்தங்கரையை அடுத்த சிங்காரபேட்டையில் அதிமுகவினர் வீதிவீதியாக பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அரசு பள்ளி சீருடைகள் அணிந்த மாணவர்கள் அதிமுக கொடி ஏந்தி வீதிகளில் ஆதரவு திரட்டிச் சென்றனர். இதை கண்ட பலர் பதபதைத்தனர். சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவதா என்று கேள்வி எழுப்பினர்.
விசாரணையில், ஒவ்வொரு மாணவர்களுக்கு தலா ரூ.50 வழங்குவதாக கூறி அழைத்து வந்தது தெரிய வந்ததுள்ளது. இந்த சம்பவம் குறித்து கண்டனங்களை தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.