சென்னை: சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, முதல்வர் எடப்பாடி அறிவித்த பெயரை மீறி, புதிய பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பல ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவையால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னையில் உள்ள மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்களைச் சூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2020ம் ஆண்டு ஜூலை 31ந்தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி,
மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டுவர அதிமுக எடுத்த முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் விவரித்திருந்ததுடன், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ – என்பது ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்று பெயரிடப்படுவதாக அறிவித்துள்ளார்.
அதேபோல் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம்’ என்று பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என்று அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
“ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததாலும், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ’ என்றும் பெயர் மாற்றங்கள் செய்து நான் ஆணையிட்டுள்ளேன்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வரின் உத்தரவை மீறி, கோயம்பேடு ரயில் நிலையத்திற்கு பாஷ்யம் என மெட்ரோ நிர்வாகம் பெயர் சூட்டி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஷ்யம் என்ற பெயரில் தமிழகத்தில் எந்தவொரு அரசியல் கட்சித் தலைவர்களும் இல்லாத நிலையில், திடீரென மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த பெயரை சூட்டி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தமிழக அரசின் அனுமதி உடன் வைக்கப்பட்டதா ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மெட்ரோ நிர்வாகத்தில் இந்த இழிசெயல், தமிழகஅரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியுமா? என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.