சென்னை: வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை உள்படல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார். இதையொட்டி, வடசென்னையின் முக்கிய பகுதிகளான வண்ணாரப்பேட்டை,  திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும் பொருட்டு பிரதமர் மோடி வருகிற 14ம் தேதி தமிழகம் வரவுள்ளார். பிப்ரவரி 14ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, வண்ணாரப் பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அத்துடன் மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.  மேலும் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டி, மேலும் பல திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிக்காக 10ஆண்டுகளுக்கும் மேலாக சாலைகள் தோண்டப்பட்டு, குண்டும் குழியாக, போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடந்து செல்லக்கூட லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது. தற்போது, பிரதமர் வருகையை முன்னிட்டு, சாலைகள் செப்பனிடும் பணிகள், சாலையோரப் பகுதிகள் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வட சென்னையில்,  சென்னை மெட்ரோ மீடியன்களை அழகுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன, வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான சுமார்  9 கி.மீ. தொலைவிலான திருவொற்றியூர் நெடுஞ்சாலை  பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.