சென்னையில் கொரோனா பரவவல் அதிகரித்ததற்கு கோயம்பேடு காய்கறி சந்தை முக்கிய காரணமாக கூறப்பட்டது. கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்தவர்கள், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், காவல் துறையினார் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், இதனால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து வியாபாரிகளின் வற்புறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 28ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது. இங்கு முதல்கட்டமாக 200 மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.மேலும், இங்கு காய்கறி வாங்க வரும் சில்லறை வியாபாரிகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணிவரை காய்கறிகளை வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டனர். மார்க்கெட்டுக்குள் ஆட்டோ, பைக், மினி சரக்கு வேன் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
அதுபோல, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் உடல் வெப்ப சோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். ஆனாால், நாட்கள் செல்ல செல்ல காலை 9 மணிக்கு கோயம்பேடு மெயின் கேட் மூடப்படுவதில்லை. மேலும், நோய் தடுப்பு விதிகளை அதிகாரிகளும், வியாபாரிகளும் கடைபிடிப்பதில்லை என்றும், விதிகளை மீறி பொதுமக்களும் சென்று வந்தனர். இதனால், மீண்டும் கோயம்பேடு சந்தையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டது. அத்துடன், பேசுவது புரியவில்லை என கூறி பெரும்பாலோர் முக்கவசங்கள் அணிவதையும் தவிர்த்து வருகின்றனர்.
இதனால், கோயம்பேடு மார்க்கெட் மண்டும் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையில், செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரையிலான 22 நாட்களில் 2800க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் கோயம்பேட்டில் கடைகளை வைத்துள்ளவர்கள், தொழிலாளர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.