சென்னை: கோயம்பேடு – ஆவடி மெட்ரோ பணிகள் குறித்து ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு ஒப்புதல் பெற்றவுடன் அடுத்த ஆறு மாதங்களுக்குள் பணிகள் தொடங்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகர மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில் சேவை, மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகர் முழுவதும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 3 வழித்தடங்களில் 116.1 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும், மற்றொரு பாதை கிளாம்பாக்கம் வரையும், வேறொரு பாதை பூந்தமல்லி வரையிலும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஐந்தாவது வழித்தடத்தில், கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் வழியாக ஆவடி வரை 16.07 கிலோமீட்டர் தொலைவிற்கு நீட்டிப்பு செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, பொதுமக்கள் கோரிக்கையின்படி மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை கோயம்பேடு முதல் ஆவடி வரை நீட்டிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆர் வி அசோசியேட்ஸ் நிறுவனம், ஏகாம்பரம் இந்தியா பிரைவேட் லிமிடெட், பார்சில் பிரைவேட் லிமிடெட் , ரைட்ஸ் லிமிடெட், சிஸ்ட்ரா லிமிடெட் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில், 15 உயர் மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய, சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இதற்கு ரூ. 6,376 கோடி செலவு செய்ய மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும், இந்த திட்ட அறிக்கை ஆறு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.