கோவை: ஆசிரியரின் பாலியல் சீண்டலால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து மாணவியின் உடலை வாங்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தற்கொலை மற்றும் பாலியல் புகார் தொடர்பாக சின்மயா பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையை உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்த மாணவி ஒருவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு,  கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது தான் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில்,  மாணவி சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்தபோது, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக எழுதப்பட்டிருந்தது. மேலும் ‘யாரையும் சும்மா விடக்கூடாது. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது என்று எழுதி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக ஏற்கனவே மாணவியின் பெற்றோர்  பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த விசயம் வெளியே தெரிந்தால் பள்ளி பெயர் கெட்டுவிடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாக கூறப்படுகிறது.  இதனால்  மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து காவல்துறையினர் ஆசிரியரை தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ என 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த பள்ளியின் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை பிடிக்க கோவை மாநகர போலீசார் சார்பில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மரணத்திற்கு நீதி கேட்டு மாணவியின் உடலை வாங்க மறுத்து, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவியின் வீட்டின் முன் போராட்டத்தில்  வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான மற்ற குற்றவாளிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர். உக்கடம் பகுதியில் பொதுமக்களும், பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.