கோட்டை மாரியம்மன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம்.கொழுமம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவக் கல் ஒன்று சிக்கியது. அதனை கரையில் போட்டுவிட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல்லே வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும், மீண்டும் வலைவீச, அந்தக்கல் வந்துகொண்டே இருந்தது. அச்சமுற்ற அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார்.

அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய அம்பாள், “ஆற்றில் லிங்க வடிவில் உனக்குத் தரிசனம் தந்தது நான்தான்” என்றாள். மீனவர் இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் கல்லை தேடியபோது கிடைக்கவில்லை.

ஓரிடத்தில் கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்குக் கோயில் கட்டினர்.

ஊரின் வடஎல்லையில் குதிரையாறும், அமராவதி ஆறும் சேரும் இடத்திற்கு அருகில் மேடான பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

அம்பாள் உயரமான இடத்தில் கோட்டை போல இருந்து ஊரைக்காப்பதால் “கோட்டைமாரி” எனப்படுகிறாள்.

குமண மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதால் இவ்வூர் “குமணன் நகர்” எனவும், வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் “குழுமூர்” எனவும் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அதுவே மருவி “கொழுமம்” என்றானது.

இங்கு அருளும் சுயம்பு மாரியம்மன், இரண்டரை அடி உயரத்தில் சிவலிங்க வடிவில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறாள். லிங்கக்கல்லின் அடியில் ஆவுடையாரும் உள்ளது. அம்பாளுக்கு உரித்தான அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட அம்பாளாகவே பாவிக்கப்பட்டுப் புடவை கட்டி அபிசேகம் மற்றும் பூசை செய்யப்படுகிறது.

கருவறையில் அணையாவிளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

புதியதொழில் தொடங்கும்போதும், வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடத்தும் போதும், அம்பாளின் தலையில் பூ வைத்து உத்தரவு கேட்டு, அனுமதி கிடைத்தால் மட்டுமே அதனை செயல்படுத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

திருவிழா: சித்திரையில் 15 நாள் பிரம்மோத்சவம்.

அம்மை நோய் நீங்க, கண்நோய் தீர, குடும்பம் செழிக்க வேண்டலாம். கண்நோய் கண்டவர்கள், இங்கு தரப்படும் தீர்த்தத்தைக் கண்ணில் விட்டுக் கொள்கிறார்கள்.

பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், முடிகாணிக்கை கொடுத்தும், கண்மலர் பொருத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.