ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட  66,575 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்.27ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.  இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நான்கு முனைப் போட்டியாக தொடங்கிய இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த  தொகுதியில் வாக்குப்பதிவுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.  மொத்தம், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர்  வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும்.

இதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 15 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்று வந்தார்.

15வது சுற்றின் முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,04,501 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 41,638 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 10,337 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,383 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் சுமார் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.