சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள  வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட  முழு உடல் பரிசோதனை மற்றும் டயாலிசிஸ் மையத்தை அமைச்சர்  கே.என்.நேரு  திறந்து வைத்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏற்கனவே,  பகுப்பாய்வுக் கூடம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியின்போது, செயல்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், அதை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, கட்டிடத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி மூலதன நிதியின்கீழ் ரூ.37லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த மையம் மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையமாக உருவாக்கப்பட்டது.

இந்த புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் டயாலிசிஸ் மையத்தை தமிழ்நாடு  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  திறந்து வைத்தார். அப்போது, புதிய டயாலிசிஸ் எந்திரங்களின் செயல்பாட்டினை அவர் தொடங்கி வைத்தார். மேலும், மையத்தில் மேற்கொள்ளப்படும் முழு உடல் பரிசோதனை நடவடிக்கைகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், பரிசோதனை மையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிட டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த மையத்தில் இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரம் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். முதல் தளத்தில் 17 எந்திரங்கள் கொண்டு ரத்த சுத்திகரிப்பு மையம் இயங்கி வருகிறது. இதுவரை 192 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். தற்போது கூடுதலாக 5 ரத்த சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் கமிஷனர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், கவுன்சிலர் பிரேமா சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.