மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சோபின் சோஹிர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’.
இந்தப் படம் தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது.
கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பதோடு, முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, மனோபோலா, மாரியப்பன், ப்ராங் ஸ்டார் ராகுல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்து உள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமாரின் மனைவி இறந்துவிட, மகன் தர்சனும் வெளிநாட்டுக்குச் சென்று விடுகிறார். வீட்டில் தனிமையில் இருக்கும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு, மகன் தர்சன் ஒரு ரோபோவை அளிக்கிறார்.
ரோபோ கே.எஸ்.ஆரை சிறப்பாக கவனித்துக்கொள்கிறது. நேரத்துக்கு மாத்திரி தருவது, சமைத்து கொடுப்பது என்று மகன் போலவே செயல்படுகிறது.
ஆனால் இதே போன்ற இன்னொரு ரோபோ, வேறொரு நபரை தாக்கி கொன்று விடுகிறது. இதை அறிந்த தர்சன், தந்தையை காப்பாற்ற இந்தியா வருகிறார்.
தந்தையை காப்பாற்றினாரா என்பதுதான் மீதிக்கதை.
கே.எஸ்.ரவிக்குமார், முதியவர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். ரோபோவை தனது மகனாகவே நினைத்து பாசம் காட்டுவது, அதை தனது மகன் பிரிக்க நினைக்கிறான் என்றவுடன் குமுறுவது என்று இயல்பாக நடித்திருக்கிறார்.
தர்சன் நடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதைவிட, நடிக்க நினைக்க வேண்டும் என சொல்லலாம். லாஸ்லியாவும் அப்படித்தான். தவிர மலையாளம் கலந்த பேச்சை இயல்பாக பேசத் தெரியவிலல்லை.
ரவிக்குமாரின் காதலியாக நடிப்பவர் அழகாகவும் இருக்கிறார் இயல்பாகவும் நடிக்கிறார். லாஸ்லியாவுக்கு அவர் பரவாயில்லை.
யோகிபாபு கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
‘எந்திரம் வெறும் எந்திரம்தான்.. மனித உணர்வுகளை – குறிப்பாக பாசத்தை – அவை உணராது..’ என்று சொல்லும் எந்திரன் கதைதான்.
ஆனால் மினிமம் பட்ஜெட்டில், வேறு கோணத்தில் எடுத்திருக்கிறார்கள்.
குழந்தைகள் ரசித்துப் பார்ப்பார்கள்.