ஜகார்த்தா: தரையில் ஊர்ந்து செல்லும் டிராகன்களுக்குப் புகழ்பெற்ற இந்தோனேஷியாவின் கொமோடோ தீவு, ஓராண்டுக்கு மூடப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டிராகன்கள் பல்லி இனத்தைச் சேர்ந்தவை.

எனவே, 2020ம் ஆண்டில் அந்த தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்போர், தமது பயணத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த 2020ம் ஆண்டு ஜனவரியிலிருந்து அந்தத் தீவு, சுற்றுலாப் பயணிகள் வருகைதர முடியாத வகையில், ஓராண்டுக்கு மூடப்படுவதாக இந்தோனேஷியாவிலிருந்து வரும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

அந்தத் தீவிலிருந்து 41 டிராகன்கள் கடத்தப்பட்டு, அவை, வெளிநாடுகளில் ஒவ்வொன்றும் தலா 35,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்தே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

மூடப்பட்டிருக்கும் நாட்களில், உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் இனப்பெருக்கம் ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட இந்த டிராகன்கள், 10 அடி நீளம் வளர்வதோடு, அதனுடைய அதிகபட்ச எடை 70 கிலோ வரை இருக்குமாம். இதனுடைய கடி விஷத்தன்மை வாய்ந்தது.

– மதுரை மாயாண்டி