லண்டன்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழுவில், கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்மணியும் இடம்பெற்று முக்கியப் பங்காற்றி வருகிறார்.
சந்திரா தத்தா என்ற 34 வயதாகும் அந்தப் பெண்மணி, ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பு மருந்து உற்பத்திக் குழுவில், தர உறுதிப்பாடு மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
அந்தப் பல்கலைக் குழுவினரால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துக்கான மனித சோதனை நடைமுறைகள் இன்னும் முடியவில்லை. அப்படி முழுமையாக முடிந்தால் மட்டுமே, அதன் தாக்கம் தெரியவரும்.
அந்த சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்தால், அதன்பின்னர் அது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, இந்தாண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் கொண்டுவரப்படும்.
கொல்கத்தாவைச் சேர்ந்த சந்திரா தத்தா, கொல்கத்தாவில் கோகலோ நினைவு பெண்கள் பள்ளியில் படித்தார். பின்னர், கொல்கத்தாவின் ஹெரிடேஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக். படிப்பை நிறைவு செய்து, கடந்த 2009ம் ஆண்டில் பிரிட்டன் சென்று, லீட்ஸ் பல்கலையில் எம்.எஸ்ஸி., பயோசயின்ஸ் படித்தார்.