சென்னை:

ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில், தவறுதலாக சுட்டதால் ஆய்வாளர் பெரிய பாண்டியன் மரணம் அடைய காரணமான கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை ரெட்டேரி நகைக்கடை கொள்ளை தொடர்பாக, கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்பட போலீஸ் படையினர் ராஜஸ்தான் சென்று கொள்ளையர்களை பிடிக்க முகாமிட்டிருந்தனர்.

கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள்மீது சுட்ட துப்பாக்கி குணடு, தவறுதலாக  பெரியபாண்டியன் மீது பட்டு உயிரிழந்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆய்வாளர் பெரியபாண்டியன் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய கொளத்தூர் ஆய்வாளர் முனி சேகரை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு உள்ளது. இந்நிலையில் விடுமுறையில் இருந்த முனிசேகர் சமீபத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், முனிசேகரை  பணியிடம் மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

அவர் எங்கு பணி செய்ய வேண்டும் என்று இடம்  குறிப்பிடப்படாமல் தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.