புனே: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், வெளிநாட்டில் பெறப்படும் டெஸ்ட் வெற்றிக்கான புள்ளிகள் இரட்டிப்பாக வழங்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார் இந்தியக் கேப்டன் விராத் கோலி.
சாம்பியன்ஷிப் தொடரின் தற்போதைய தொடக்க நிலை, டெஸ்ட் போட்டியின் தரத்தை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் விதிமுறையின்படி, ஒரு அணி ஒரு தொடரை முழுமையாக வென்றால், அந்த அணிக்கு மொத்தமாக 120 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அந்த டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்டதாக இருந்தாலும் சரி, வெறும் 2 போட்டிகள் மட்டுமே கொண்டதாக இருந்தாலும் சரி.
இதைக் குறிப்பிட்ட கேப்டன் கோலி, “என்னைக் கேட்டால் வெளிநாட்டில் பெறப்படும் டெஸ்ட் வெற்றிக்கு இரண்டு மடங்கு புள்ளிகள் தரப்பட வேண்டுமெனக் கூறுவேன். இந்த மாற்றம் முதல்நிலைப் போட்டிகள் முடிந்து, இரண்டாம் நிலைப் போட்டிகளின் துவக்கத்தில் ஏற்படும் என விரும்புகிறேன்” என்றார்.
தற்போதைய நிலையில், இந்திய அணி மொத்தம் 160 புள்ளிகளைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. மேற்கிந்திய தீவுகளில் பெற்ற தொடர் வெற்றிக்காக 120 புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் வெற்றிக்கு 40 புள்ளிகள் வழங்கப்பட்டன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூலம், இனிமேல் எந்த அணியும் டிரா செய்வதற்காக ஆட விரும்பாது என்றும், ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியமானதாக மாறும் என்றும் கூறியுள்ளார் கோலி.