லண்டன்: மகேந்திர சிங் தோனிக்கு போட்டியின் எந்த சூழலில் எப்படி ஆடவேண்டுமென்பது தெரியும். அவர் ஒரு லெஜன்ட் என்று கூறி அவருக்கு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகிறார் இந்திய கேப்டன் விராத் கோலி.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மெதுவான இன்னிங்ஸ் ஆடினார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த ஆட்டத்தில் 61 பந்துகளில் 56 ரன்களை எடுத்தார் தோனி. 45வது ஓவரைக் கடந்த பின்னரும் அவர் மெதுவாக ஆடுகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த விராத் கோலி, “தோனி ஒரு லெஜன்ட். அவருக்கு எந்த இடத்தில் எப்படி ஆடவேண்டுமென்பது தெரியும். அவர் 300 ரன்களைத் தொட வேண்டுமென நினைத்து நேற்றையப் போட்டியில் விரைவாக ஆடியிருந்தால் நாங்கள் 230 ரன்களுக்குள் முடங்கியிருப்போம்.
பல நெருக்கடியான நேரங்களில் அவர் அணிக்கு வெற்றித்தேடி தந்திருக்கிறார். அவரின் அனுபவம் எங்களுக்கு எப்போதும் தேவை. எங்கள் அணியில் உள்ள பல திறமையான வீரர்களை சரியான முறையில் வழிநடத்த அவர் வேண்டும். நேற்று நாங்கள் நிர்ணயித்த 268 என்பது வலுவான இலக்குதான்” என்றுகூறி தோனியை ஆதரித்துள்ளார்.
விராத் கோலி உட்பட, இந்திய அணியின் பல வீரர்களும், இக்கட்டான நேரங்களில் தோனியை தொடர்ந்து ஆதரித்து வருவது கவனிக்கத்தக்கது.