இந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் விஷயத்தில் இந்திய அணி சொதப்ப தொடங்கியிருந்தாலும், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் விஷயத்தில் ஒட்டுமொத்தமாக சிறப்பாகவே செயல்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

முதன்முதலில் தென்னாப்பிரிக்க அணியுடன் மோதிய போட்டியில், அந்த அணியை 227 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியா.

பின்னர், பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில், ஆட்டம் முழுமையாக நடக்காமல் டிஎல்எஸ் முறைக்கு மாறியதால், இந்தியாவால் பாகிஸ்தானின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்ற இயலவில்லை. அதேசமயம், 337 என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தானை 165 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இந்தியா பிடுங்கியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆட்டம் முழுமையாக நடந்திருந்தால் பாகிஸ்தான் கட்டாயம் எப்படிப்பார்த்தாலும் 250 ரன்களைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை.

மற்றபடி, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் ஆடிய ஆட்டத்தில், எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் இந்தியா கைப்பற்றியுள்ளது என்பது முக்கியமானது. தென்னாப்பிரிக்க அணியுடனான ஆட்டத்தில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கோட்டைவிட்டது.

இதன்மூலம், இந்தியாவின் பேட்டிங் யூனிட் எப்படி இருக்கிறதோ இல்லையோ, அதன் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் யூனிட் சிறப்பாகவே இருக்கிறது என்பதை உறுதிசெய்ய முடிகிறது.