உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், அவரது மறைவுக்கு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ள சம்பவத்தின்போது வீட்டின் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இதில் சம்பந்தம் பட்டிருப்பதாக கூறப்படும் சிலரும் அடுத்தடுத்து மரணங்களை எய்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, தனிப்படைகள் அமைத்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உ தகை மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜ் நேரில் ஆஜராகினார். மேலும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி., ஏடிஎஸ்பி., முருகவேல் தலைமையில் போலீஸார் ஆஜராகினர்.
தற்போது சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதம் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.