கோவை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு கும்பல் புகுந்து கொள்ளையடித்து சென்றது. அப்போது காவலுக்கு நின்ற நேபாளிகளை அடித்து உதைத்தனர். இதில் ஒரு காவலாளி இறந்தார். மற்றொரு காவலாலி மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறினார்.

இந்நிலையில், இந்த கொலை மற்றும் கொள்ளையில் இதுவரை தலைமறைவாக இருந்த கேரளாவை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட  ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பலியானார். அதைத்தொடர்ந்து அவது கூட்டாளியான  கோவையை சேர்ந்த சயன் என்பவர் பாலக்காடு அருகே கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருடைய மனைவி மற்றும் மகள் அந்தவிபத்தின்போது இறந்தனர்.

சயன்  தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் அடிப்படையில் மற்றொரு குற்றவாளியான ஜிஜின் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

அவரது செல்போன் எண் மூலமும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் செல்போனுக்கு வரும் அழைப்புகளின் பட்டியலையும் சேகரித்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து இன்று காவலை அவர் கேரளாவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இவர் மீது கேரளாவில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது. இவர் தான் ஜெயலலிதா அறைக்குள் புகுந்து சூட்கேஸ்களை திறந்து கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஜிஜின் இன்று மாலை கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது