கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் தனிப்படை போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.
இதில் சிறையில் அடைக்கப்பட்ட மனோஜ், சயான் ஜாமினில் வெளியே வந்த நிலையில், இந்த கொலை, கொள்ளை வழக்கில், அப்போதைய முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டிருந்தார். அதில் பேசியிருந்த கொடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் இருந்த மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொட நாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வருகின்றனர். கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கோடநாடு வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்தாண்டு உதகை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் நேற்று முதல் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சயானிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.