சென்னை: ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும், அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  பேரவையில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

தமிழக சட்டபேரவையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம்நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது,  உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர். அப்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  “நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் மறுவாழ்வுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து அறிவித்ததன்படி, சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை என புதிதாக மொத்தம் 200 மருத்துவமனைகள் அமைக்கப்படும். இதன் மூலம் பெரிய மருத்துவமனைகளில் மக்கள் அதிகளவில் வருவதை தவிர்க்க முடியும் என்றார்.

மற்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் கூறியவர்,  தஞ்சாவூரின் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக பிரேத பரிசோதனைக் கூடம் இந்த ஆண்டுக்குள் அமைக்கப்படும் எனவும், கடலூரில் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதுபோல, அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்கப்படுமா என உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவித்த அமைச்சர் பொன்முடி,  தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும், எதிர்காலத்தில் அரசு கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்க ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.