ஊட்டி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முன்னாள் நீலகிரி மாவட்ட எஸ்பியும், தற்போதைய சிபிஐ எஸ்பியுமான முரளி ரம்பாவுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது. அந்த சம்பவத்தை தடுக்க எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் உள்பட சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதுவும் விசாரணை குறித்த ஐயத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு, சிபிசிஐடி தலைமையில் ‘விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
வ்வழக்கு சம்மந்தமாக கடந்த ஒருவருட காலமாக சசிகலா, பத்திரிகையாளர் மருது அழகுராஜ், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்ஷ ஆறுகுட்டி உள்ளிட்ட 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து, 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை ஆவண நகல்களை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் தான் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்தவர் முரளி ரம்பா. தற்போது அவர் சிபிஐ-ல் பணியாற்றி வரும் நிலையில், அவரிடம் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் முடிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த சம்மன் சிபிஐ தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பா ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு புலனாய்வுத்துறை முன் ஆஜராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.