சென்னை: இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒத்திகை நிகழ்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெறும் நோய் தடுப்பு ஒத்திகையை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும்  “1.75 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதாகவும், 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகளும் -தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை என்றும்,  பொதுமக்கள் சுயக்கட்டுப்பாடுடன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனா, ஜப்பான் உள்பட பல்வேறு உலக நாடுகளில் அதிகரித்து வரும் உருமாறிய  பிஎஃப் 7 கொரோனா தொற்று. இந்தியாவிலும் சிலருக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முக்கவசம் அணி வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், மருத்துவமனைகள், ஆக்சிஜன் தேவைகள், மருந்துகள் தயாராக வைத்திருக்கும்படியும், மருத்துவமனைகளில்  கொரோனா தடுப்பு ஒத்திகை நடுத்தும்படியும் மத்தியஅரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.

மத்தியஅரசின் அறிவுறுத்தலின்படி,  இன்று நாடு முழுவதும் கொரோனா ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மருத்துவமனைகளில் இன்று கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெறும் நோய் தடுப்பு ஒத்திகையை பார்வையிட்ட  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீலோ இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 51ஆக உள்ளது.

தமிழ்நாடு மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 1954 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. 6 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாடு தயார் நிலையில் உள்ளது என்பதை இந்த மாதிரிப் பயிற்சி மூலம் உறுதிப்படுத்துகிறோம். பிற அரசு மருத்துவமனைகள் அடுத்த 24 மணி நேரத்திலும், தனியார் மருத்துவமனைகள் 48 மணி நேரத்திலும் உறுதிப்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

“மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டவாரா, வட்டம் சாரா மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவை எதிர்கொள்வது சம்பந்தமான வழிமுறைகளை உறுதிபடுத்திக் கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மருத்துவமனையின் பொறுப்பு அலுவலர்களும் 12 மணி நேரம் அவரவர் சார்ந்த மருத்துவமனைகளை ஆய்வு செய்து மருத்துவ வசதிகளை சரிபார்க்க வேண்டும்.

எவ்வளவு படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன என்பது குறித்து உறுதிப்படுத்த வேண்டும்.கொரோனா பாதிப்புக்குள்ளானபோது பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் கையிருப்புகள் சோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரத்தில் சோதனையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து தங்கள் தலைமையிடம் அறிவிக்க வேண்டும். கடந்த 20 நாள்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது. நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்தநாட்டில் மாதிரிகள் பகுப்பாய்வு  செய்யும் வசதி உள்ளது. தேவையான வசதிகள் இருப்பதால், கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது.

இவ்வாறு கூறினார்.