ஸ்லோவாகியா நாட்டின் நிட்ரா நகரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள தலைநகர் ப்ரடீஸ்லவா-வுக்கு 35 நிமிடங்களில் சென்று சேர்ந்தது க்ளென் விஷன் தயாரித்திருக்கும் புதிய ‘பறக்கும் கார்’.

பி.எம்.டபுள்யூ. 1.6 லி என்ஜினை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த கார், தரையிலும் வானத்திலும் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

1000 கி.மீ. வரை பயணம் செய்யக்கூடிய இந்த பறக்கும் கார் மணிக்கு 190 கி.மீ. வேகம் செல்லக்கூடியது, இதற்கு ஒரு மணி நேரத்திற்கு 18 லிட்டர் எரிபொருள் செலவாகும்.

இதுவரை 141 முறை சோதனை ஓட்டம் நடத்திய நிலையில் சென்ற வாரம் 142 வது முறையாக இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இரண்டு பேர் அமர்ந்து பயணிக்க கூடிய இந்த பறக்கும் காரை நிட்ரா நகரில் உள்ள விமான நிலையம் வரை சாலை வழியே ஓட்டிவந்த இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டெபான் க்ளென் மற்றும் அதன் துணை நிறுவனர் ஆண்டன் ஸஜாக் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து இதனை வானில் பறக்க விட்டனர்.

300 மீட்டர் நீள ஓடுபாதை இருந்தாலே போதுமான வகையில் இதன் செயல்திறன் அமைந்துள்ளது, மேலும், பட்டனை அழுத்தினால் மூன்றே நிமிடங்களில் காரில் உள்ள சிறப்பு அம்சங்களை கொண்டு, பறப்பதற்குத் தேவையான இறக்கை மற்றும் வால் பகுதியை மாற்றியமைத்து பறப்பதற்குத் தயாராகி விடுகிறது இந்த பறக்கும் கார்.

வானில் பறந்த இவர்கள் இருவரும் 35 நிமிடம் கழித்து தலைநகர் ப்ரடீஸ்லவா-வில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கினர், அங்கிருந்து தங்கள் அலுவலகத்திற்கு மீண்டும் சாலை வழியாக வந்தவர்கள், “இந்த இரு நகரங்களுக்கும் இடையில் உள்ள தூரத்தை சுங்கச்சாவடிகள் உள்ள போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் செல்ல ஒரு மணி நேரம் ஆகும், இந்த பறக்கும் கார் மூலம் பயண நேரம் பாதியாக குறைந்திருக்கிறது” என்று தங்கள் சோதனை ஓட்ட வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

சோதனை ஓட்ட வெற்றியைத் தொடர்ந்து இதனை வியாபார ரீதியில் தயாரிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள இவர்கள், மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய மாடல் ஒன்றும், அதேபோல் 3 முதல் நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய வகையிலான மாடல் பறக்கும் காரையும் வடிவைமைத்து வருவதாக கூறினர்.

இவ்வகை பறக்கும் கார்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறும்போது, தனி விமானங்களை வாங்குவதை விட இவ்வகை பறக்கும் கார்களை வாங்கி மேஜிக் ஜர்னி செல்ல பலரும் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படங்கள் மற்றும் வீடியோ நன்றி : க்ளென் விஷன்