டில்லி

மிழக மக்களைப் பற்றி தவறான கருத்து தெரிவித்ததற்கு புதுவை ஆளுநர் கிரண் பேடி வருத்தம் தெரிவித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுவை ஆளுநர் கிரண் பேடி, “சென்னையில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சத்துக்கு மோசமான ஆட்சிகளே காரணம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சென்னை வறட்சியில் முதல் நகரமாக மாறி இருக்கிறது. மோசமான ஆட்சி மட்டுமின்றி ஊழல் அரசியல், அதிகார அலட்சியத்தாலும் இந்த பஞ்சம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக தமிழக மக்களின் மோசமான அணுகுமுறையும் இதற்கு முதல் காரணம்” என டிவிட்டரில் பதிர்ந்திருந்தார்.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் கிரண் பேடி ராஜினாமா செய்யவேண்டும் என்வும் கூறினார். இது குறித்து மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு, “புதுச்சேரி ஆளுநர் தமிழக மக்களை டிவிட்டரில் தவறாக சித்தரித்துள்ளார். அவரது கருத்தை மத்திய அரசு ஆதரித்தால் அதை மத்திய அரசும் ஒப்புக் கொள்வதாக பொருள்” என உரையாற்றினார்.

இதற்கு பதில் அளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “கிரண் பேடி இதுகுறித்து எழுதிய கடிதத்தில், ‘எனது கருத்துக்களுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். மேலும், எழுதப்பட்டவை எனது தனிப்பட்ட கருத்தாக இருந்தன, இருப்பினும் இது தவிர்க்கக்கூடியது என்று நான் ஒப்புக்கொள்கிறேன்.

புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கருத்து பதிவிடவில்லை. எதிர்ப்பு எழுந்தவுடன் உடனடியாக அதனை நீக்கிவிட்டேன்’ என குறிபிட்டுள்ளார். அத்துடன் தனது பதிவை அவர் நீக்கி விட்டார்” என கூறினார்.