டில்லி

ந்தியாவில் சுத்தம், சுகாதாரம் மற்றும் விருந்தோம்பலில் புகழ்பெற்ற காவல்நிலையமாக ராஜஸ்தான் மாநில காவல் நிலையம் தேர்வு பெற்றுள்ளது.

இந்தியாவில் காவல் நிலையம் என்றாலே மக்கள் மனதில் ஒரு பயம் உள்ளது. இந்த பயம் என்பது குற்றம் புரிவோருக்கு மட்டுமின்றி நிரபராதிகளுக்கும் உள்ள ஒன்றாகும். பெரும்பாலான நேரங்களில் பல காவல்துறையினர் காவல் நிலையங்களுக்கு செல்வோரிடம் மதிப்பு அளித்து பேசுவதில்லை என்னும் குறை மக்களுக்கு உண்டு அத்துடன் காவல்நிலையத்தில் தூசு, கறைகள் போன்றவைகள் சுத்தம் செய்யப்படுவதும் கிடையாது என்பது பலரும் அறிந்த ஒன்றாகும்.

இந்திய அளவில் சிறந்து விளங்கும் காவல் நிலையங்கள் குறித்த ஆய்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வில் 15666 காவல்நிலையங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. காவல்துறையின் முக்கிய பணி குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதாகும். எனவே வழக்குகளை சீக்கிரம் முடித்தல், குற்றச் செயல்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

அதன் பிறகு காவல் நிலைய சுற்றுப்புற சுத்தம் போன்றவை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டன. புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பது, மற்றும் புகார் அளிக்க வருவோரிடம் காவலர்களும் அதிகாரிகளும் நடந்துக் கொள்ளும் முறை ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது.

காவலர்கள் பாதசாரிகள் மற்றும் சாலை ஓர கடைக்காரர்களிடம் நடந்துக் கொள்ள்வதும் குறிப்பாக சட்ட ஒழுங்கு பிரச்னை நேரும் போது அதை அந்த குறிப்பிட்ட காவல் நிலையம் எவ்வாறு கையாண்டுள்ள்து என்பது முக்கியமாக ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் மதிப்பெண்கள் போடப்பட்டு அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள காவல் நிலையத்துக்கு முதலிடம் அளிக்கப்பட்டது.

இந்த வரிசையில் ராஜஸ்தான் மாநிலம் பில்கனேர் மாவட்டத்தில் உள்ள காலு காவல் நிலையம் முதல் இடம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் அந்தமான் நிகோபார் தீவுகளில் நிகோபாரில் உள்ள காம்பெல் பே காவல் நிலையம் உள்ளது. மூன்றாவதாக மேற்கு வங்க மாநிலம் ஃபராக்கா மாவட்ட்த்தின் முர்ஷிதாபாத் காவல் நிலையமும், நான்காம் இடத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நெட்டப்பாக்கம் காவல் நிலையமும் ஐந்தாவதாக கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் குட்கரி காவல் நிலையமும் இடம் பெற்றுள்ளன.