பா.ம.க.வினர் ஆக்கிரமிப்பு..  ராமதாஸ் அய்யா கவனிங்க!: கைது செய்யப்பட்ட நக்கீரன் பகிரங்க கோரிக்கை (வீடியோ)

சாதியைச் சொல்லி திட்டியதாக பா.ம.க பிரமுகர் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அறப்போர் இயக்க பொருளாளர் நக்கீரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், “குமார் குறிப்பிட்ட அந்த மேடைப்பேச்சில் நக்கீரன் எங்கும் சாதியைப்பற்றிப் பேசவே இல்லை. அது அறப்போர் இயக்கத்தின் வழக்கமும் இல்லை.

தவிர, அதே மேடையில் “ராமதாஸ் அய்யா கவனிங்க.. உங்க கட்சிக்காரங்க ஆக்கிரமிப்பு செய்யறாங்க” என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு நக்கீரன் பகிரங்க கோரிக்கை வைத்தார்” என்று அறப்போர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அறப்போர் இயக்கத்தினர் தெரிவிப்பதாவது:

சென்னை இராமாபுரம் பகுதியில் கலசாத்தம்மன் கோவில் நிர்வாகிகள் என்று பாட்டாளி மக்கள் கட்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் குமார் தலைமையில் அரசியல்வாதிகள் கடந்த 10 வருடங்களாக அந்த பகுதியை சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாக கோவில் முன்பாக செல்லும் சாலையை ஆக்கிரமித்து மண்டபம் கட்டும் பணியை ஆரம்பிக்கிறார்கள். சாலையின் மறுபுறம் உண்டியலையும் வைக்கிறார்கள். அந்த சாலை அதிகமாக பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை என்பதால் அங்குள்ள மக்கள் அதை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். பல புகார்களும் அளிக்கிறார்கள். ஆனால் அரசியல் பின்புலம் இருப்பதால் பொது மக்களின் புகார்கள் பற்றி எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இது குறித்து அந்த பகுதி மக்கள் அறப்போர் இயக்கத்திடம் ஆதாரங்களோடு புகார் கொடுக்கிறார்கள்.

அறப்போர் இயக்கம் சார்பாக காவல்துறை, தாசில்தார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியோருக்கு புகார் அனுப்பப்படுகிறது. தாசில்தார் இடத்தை பார்வையிட்டு அந்த மண்டபம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக பதிவு செய்கிறார். ஆனால் அந்த ஆக்கிரமிப்பை அகற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி புகாரை தள்ளுபடி செய்கிறார். அடுத்ததாக மாநகராட்சி அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து இது விதிகளை மீறி சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதால் கட்டுமான வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இதற்கு 15 நாட்களில் முறையான விளக்கம் கொடுக்கப்படவில்லை என்றால் மண்டபத்தை இடிக்க நோட்டீஸ் கொடுக்கப்படும் என்றும் Stop Notice கொடுக்கிறார்கள். கட்டுமான வேலை நிறுத்தப்படுகிறது. ஆனால் மாநகராட்சி Demolition Notice கொடுக்கவில்லை. ஏன் என்று காரணம் கேட்ட போது தங்களுக்கு காவல்துறை ஒத்துழைப்பு தர மறுக்கிறது என்று தெரிவித்துவிடுகிரார்கள். காவல்துறையிடம் விளக்கம் கேட்ட போது அதெல்லாம் எங்கள் பிரச்சனை கிடையாது என்று பயந்து ஒதுங்குகிறார்கள்.

கடந்த ஞாயிறு அக் 28 அன்று ராமாபுரத்தில் பொதுமக்களை கூட்டி அந்த பகுதி பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டது. அதற்கு அந்த பகுதி MLA Benjamin அவர்களுக்கும் நேரில் அழைப்பு கொடுக்கப்பட்டது. வருவதாக உறுதி அளித்த அவர் வராததால் மேடையில் இருந்தே அவரை அழைத்து விவரம் கேட்க முற்பட்டபோது அவர் அழைப்பை துண்டித்துவிடுகிறார். அதற்கு பிறகு பேச வந்த நக்கீரன் கோவில் பிரச்சனை குறித்து பொதுமக்களுக்கு விளக்க ஆரம்பிக்கிறார். அப்பொழுது அங்கே வந்த #பாமக மாநில செயற்குழு உறுப்பினர் குமார் அவர்கள் தன்னையும் மேடையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூச்சல் போடுகிறார். நக்கீரன் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். அப்பொழுது இவர் தான் அந்த கோவில் பெயரில் சாலையை ஆக்கிரமிப்பு செய்யும் பாமக குமார் என்று அவரை மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். மக்கள் அனைவரும் அவரை அங்கிருந்து போக சொல்லவே இதை முழுவதுமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த R11 ஆய்வாளர் நாகராஜ் குமாரை அங்கிருந்து இழுத்துச் சென்று வெளியேற்றுகிறார். சிறிது நேரம் கழித்து கூட்டம் முடியும் தருவாயில் இருபதுக்கும் மேற்ப்பட்ட பாமக அடியாட்களுடன் (அநேகர் குடிபோதையில் இருந்தனர்) அங்கு வந்த குமார் கூச்சல் போட்டு தள்ளுமுள்ளு செய்து பொதுமக்களை பயம்காட்டி விரட்டி அடிக்கிறார். இதையும் R11 ஆய்வாளர் நாகராஜ் வேடிக்கை பார்க்கவே பொதுமக்கள் அவரிடம் முறையிடுகின்றனர். பிறகு காவலர்கள் அந்த அடியாள் கூட்டத்தை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர். அப்பொழுது கூட இன்ஸ் நாகராஜ் யாரையும் கைது செய்யவில்லை.
ஆனால் கூட்டம் நடந்து 4 நாட்கள் கழித்து அதிகாலை 4 மணிக்கு நக்கீரன் வீட்டிற்குள் நுழைந்து அவரது தொலைபேசியை பிடுங்கிக்கொண்டு கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளார். அறப்போர் இயக்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலவரம் செய்த பாமக அடியாட்களை கைது செய்யாத இன்ஸ்பெக்டர் நாகராஜ் அவர்களுக்கு அடியாளாக செயல்பட்டு ஏதோ தீவிரவாதியை கைது செய்வது போல நக்கீரன் அவர்களை அதிகாலையில் கைது செய்துள்ளார்.

தாசில்தார் இவர்களுக்கு பயப்படுகிறார்.
மாநகராட்சி இவர்களுக்கு பயப்படுகிறது.
காவல்துறை இன்ஸ்பெக்டர் நாகராஜ் இவர்களுக்கு அடியாளாக செயல்படுகிறார்.
புகார் கொடுத்த குமார் அதில் சம்பந்தமே இல்லாமல் தங்களின் ஜாதி பெயரை இழிவுபடுத்தியதாக புகார் அளிக்கிறார். மேலும் அதிமுக அமைச்சரை பொதுக்கூட்டத்தில் இருந்து அழைத்து கிண்டல் செய்ததாக புகார் கொடுக்கிறார். அதிமுக அமைச்சர் பெஞ்சமின் மேல் இவருக்கு அவ்வளவு பாசம்.

ஊழல் மற்றும் ஆக்கிரமிப்பு என்று வந்துவிட்டால் ஆளும்கட்சி எதிர்கட்சி என அனைவரும் ஒன்றாக இணைந்துவிடுவார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். இவர்களுக்கு எதிரான நமது போர் எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் இதன் மூலம் உணரலாம். கைது செய்து சிறையில் அடைப்பதால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிவிடலாம் என்று அவர்கள் நினைத்தால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை நாம் அவர்களுக்கு விரைவில் உணர்த்துவோம்.

திமுக அதிமுக பிரமுகர்கள் செய்யும் ஆக்கிரமிப்புகளையும் ஊழல்களையும் கண்டிக்கும் பாமக தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தன்னுடைய கட்சி செயற்குழு உறுப்பினர் ராமாபுரம் கோவில் குமார் செய்துள்ள ஆக்கிரமிப்புகள் பற்றி விசாரிப்பார்களா? அவருடைய ஆக்கிரமிப்புகள் பற்றி விமர்சனம் செய்பவர்களை ஜாதியை சொல்லி திட்டியதாக பொய் வழக்கு போடும் தங்கள் கட்சி பிரமுகர்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பார்களா?

நக்கீரனின் அந்த மேடைப்பேச்சு வீடியோ

[embedyt] https://www.youtube.com/watch?v=iD704krX0bY[/embedyt]