சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில், திமுக அமைச்சர்கள் மீது சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார்.
சமீபத்தில் அவசரகதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு குளறுடிகள் நடைபெற்றுள்ளன. இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது. முற்றிலும் பணிகள் முற்றுப்பெறாத நிலையில், திடீரென பேருந்து நிலையம் திறக்கப்பட்ட விவகாரமும், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், மற்றும் வாடகைகளை தொடர்பான டெண்டர் விவகாரமும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதப்பொருளாக மாறி உள்ளன.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பராமரிப்பு டெண்டரில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமைச்சர்கள் சிவசங்கர், சேகர் பாபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர், “தமிழக அரசு சிஎம்டிஏ (CMDA), கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடித்து, அந்தப் பேருந்து நிலையத்தை பராமரிப்பு செய்வதற்கான 15 ஆண்டுகால ஒப்பந்தத்தை வெளிப்படையாக நடத்தாமல், டெண்டர் விடும் பொழுது பிவிஜி என்னும் ஒரே ஒரு நிறுவனம்தான் அதில் பங்கேற்கிறது.
15 ஆண்டு காலத்திற்கு பல கோடி ரூபாய் உள்ள டெண்டர் விடும் பொழுது, ஒரே ஒரு விண்ணப்பதாரர் மட்டும் அதில் வந்திருந்தால், அரசின் கடமை டெண்டர் ட்ரான்ஸ்பிரேஷன் விதிமுறைகள்படி, அந்த டெண்டர் ரத்து செய்த பிறகு புதிய டெண்டர் விட வேண்டும்.
ஆனால், இந்த டெண்டரைப் பொறுத்தவரை, பிவிஜி எனும் ஒரே ஒரு நிறுவனம்தான் இந்த டெண்டரில் பங்கெடுத்து உள்ளது. தமிழக அரசு அவசர, அவசரமாக அந்த நிறுவனத்திற்கு ரகசியமாக டெண்டர் கொடுத்தது மட்டுமல்லாமல், நீதிமன்றத்திற்குச் சென்று யாராவது தடை வாங்கிடப் போறார்கள் என்ற காரணத்தினால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முழு பணிகளும் முடிவடையாத நிலையில், அவசர அவசரமாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இந்த பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த டிச.30 அன்று திறக்கப்பட்ட பிறகு, டிச.31 அன்றுதான் இந்த நிறுவனம் பேங்க் கேரண்டியை சிஎம்டிஏக்கு உத்தரவாதமாக வழங்கியுள்ளது. அதேபோல, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் பராமரிப்பதற்கு என்றே 30 நாட்களுக்குள் புதிய நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற அந்த விதியையும் பிவிஜி நிறுவனம் மீறி, கடந்த டிச.30 அன்றுதான் இந்த புதிய நிறுவனம் பதிவு செய்யப்படுகிறது.
இந்த விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்கு பிவிஜி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக, இந்த பேருந்து நிலையத்தைப் பராமரிப்பதற்காக, பிவிஜி நிறுவனம் 2 கோடியே 40 லட்சம் ரூபாயை ஒரு ஆண்டுக்கு சிஎம்டிஏ நிறுவனத்திற்குச் செலுத்துகிறது. ஆனால், பிவிஜி நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய லாபம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த டெண்டரில் அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சிஎம்டிஏ செயலாளர் அம்சர் மிஸ்ரா, நிதித்துறையின் கூடுதல் செயலர் பிரசாத், பிரகாஷ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமையக டிஎஸ்பியிடம் நான் நேரில் சென்று புகார் அளித்துள்ளேன்.
நான் கொடுத்த வழக்கை இப்பொழுது ஆட்சியில் இருக்கும் திமுகவினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால், இன்று (ஜன.5) நான் வழங்கியிருக்கக் கூடிய இந்த புகாரானது, நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நிச்சயமாக விசாரிக்கப்படும் என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை இந்த புகாரை விசாரிக்கவில்லை என்றால், நான் நீதிமன்றம் செல்ல உள்ளேன் என்றார்.
தாம்பரம் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, , சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்ற பெயரில் திமுக இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துக்கொண்டு இருக்கிறது, முதுகில் குத்திக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒரு சம்பிரதாய ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, காவல்துறை தடியடி நடத்துவதும், ஒருமையில் பேசுவதும், குறிப்பாக காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும்தான் தெரிகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருக்கக்கூடிய பேராசிரியர் ஜவாஹிருல்லாதான் இதைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டும். சிறுபான்மையினரின் உண்மையான பாதுகாவலர்கள் திமுகதானா என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.