டெல்லி:  ஒரே நாடு, ஒரே தேர்தல் (One Nation One Election) குறித்து கருத்து தெரிவிக்க ஜனவரி 15வரை அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நடப்பாண்டு, ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்து உள்ளது. இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் உள்பட திமுக உள்பட  சில மாநில கட்சிகள்,  எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுதொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டுமா? வேண்டாமா?  என்பத குறித்து பொதுமக்கள்   ஜனவரி 15ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி  நாடு சுதந்திரம் அடைந்து 1950-ல் அரசியல் சாசனம் அமலுக்கு வந்த பிறகு நடைபெற்ற முதல் 4 தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் ஒன்றாகத்தான் நடந்தன. அப்போது எந்த பிரச்சினையும் இல்லை.

ஒரு கட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டதாலும், இதேபோல் சட்டமன்றத் தேர்தல்கள் முன்கூட்டியே நடத்தப்பட்டதாலும் தேர்தல்கள் பல்வேறு காலங்களில் நடக்கும் வகையில் மாறிப்போனது. இந்த நிலையில், மத்தியில் ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு, தேர்தல் செலவினங்களை குறைக்கும் வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை மீண்டும் கொண்டு வர முயற்சித்து வருகிறது.

அரசியல் சாசனத்தைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்தின் பதவிக்காலமும் சட்டமன்றங்களின் பதவிக்காலமும் 5 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விஷயத்தில் அரசியல் சாசன திருத்தத்தைக் கொண்டு வருவது அவசியமாகிறது. அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமானால், 3-ல் 2 பங்கு எம்,பி.க்களின் ஆதரவு அதற்கு இருக்க வேண்டும். குறைந்தது 50 சதவீத எம்பிக்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும். அதோடு, குறைந்தது 50 சதவீத சட்டமன்றங்களின் ஆதரவு இதற்கு கட்டாயம் தேவை. .

ரே நாடு ஒரே தேர்தல் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டால், வாக்காளர்கள் வாக்களிக்க ஒரே முறை சென்றால் போதும். அதோடு, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அனைவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கவனம் செலுத்த முடியும்.

கடந்த ஆண்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற காலக்கட்டத்தில், இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைடுத்து,   முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில்  குழு  அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அதுபோல, இந்திய தேர்தல் ஆணையமும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் சிரமம் இருக்காது என கூறியது.. ஏனெனில், நாம் தற்போது மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு மாறிவிட்டோம். நம்மிடம் போதுமான மனித வளம், தொழில்நுட்ப வளம் உள்ளது. வாக்காளர்களும் தற்போது எதற்காக வாக்களிக்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள் என கூறப்பட்டது.

மக்களவை முதல் பஞ்சாயத்து தேர்தல் வரை, நாட்டின் மூன்று அடுக்குகளிலும் தேர்தல் நடத்த, மொத்தம், 10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் அல்லது ஒரு வாரத்திற்குள் நடத்தப்பட்டால், அதன் செலவு ரூ.3 முதல் 5 லட்சம் கோடி வரை குறையும் என்றும் கூறப்படுகிறது.

நாட்டில் மொத்தம் 4500 சட்டமன்ற தொகுதிகளும், 500 மாநகராட்சி இடங்கள் உள்ளன. இதேபோல், அனைத்து மாவட்டப் பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து என அனைத்து தேர்தல்களையும் நடத்த ரூ.4.30 லட்சம் கோடி செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 650 மாவட்டப் பஞ்சாயத்து இடங்கள், 7000 உள்ளாட்சி இடங்கள் மற்றும் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்து இடங்கள் உள்ளன. அனைத்து தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதன் மூலம் பயணம், ஊடகப் பிரச்சாரம், பூத் அளவிலான பணிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கான செலவுகளைக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டத்துறை முன்னாள் செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா. ஒரே நாடு ஒரே  தேர்தல் நடைமுறைக்கு வந்துவிட்டால் மிகப் பெரிய அளவில் மனித சக்தி சேமிக்கப்படும், வாக்காளர்களுக்கு இது மிகவும் உதவும், தற்போதைய அமிர்த காலத்தில் இது மிக முக்கிய தேர்தல் சீர்திருத்தமாக இருக்கும்” என்று  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை அனுப்பலாம். இந்த பரிந்துரைகளை onoe.gov.in அல்லது sc-hic@gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நடப்பாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  மிகவும் எதிர்பார்க்கப்படும்  இந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு  ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில்தான் பொதுமக்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து கருத்துக்களை ஜனவரி 15ந்தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.