சென்னை: சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அருகே கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையம், சாதாரண மழைக்கே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இது சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில்,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில், ரூ.12 கோடியில் கால்வாய் அமைக்க சிஎம்டிஏ திட்டமிட்டு உள்ளதாக, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா  தெரிவித்துள்ளார்.

சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. தேங்கும் மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே சாதாரண மழைக்கே மழைநீர் குளம்போல தேங்கி கடும் வாகன நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக  பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகில், அதிகளவில் மழைநீர் தேங்கியதால், போக்கு வரத்து ஸ்தம்பித்தது. ஆட்டோவில் பாதியளவுக்கு தேங்கிய தண்ணீர் தேங்கியது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வேகம் குறைத்து இயக்கப்பட்டன. இதனால், ஜி.எஸ்.டி., சாலையின் இரு மார்க்கத்திலும், வாகனங்கள் வரிசைகட்டி மெதுவாகச் சென்றன. இரவு 7:30 மணிக்கு, கொஞ்சம் கொஞ்சமாக மழைநீர் வடியத் துவங்கியது. அதன்பின், போக்குவரத்து சீரானது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பகுதியில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமுக ஊடகங்களிலும் இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலானது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா,  கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் பகுதியில்  மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ. 12 கோடியில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். . தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய் அமைக்கப்படும் என்றவர்,  கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் பகுதியில் தண்ணீர் தேங்குவதை முற்றிலுமாக தடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.